Manipur Violence: விஸ்வரூபம் எடுத்த பழங்குடியின பெண்கள் விவகாரம்.. ட்விட்டருக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இரண்டு மணிப்பூரி பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து நடத்தும் வைரலான வீடியோவைப் பகிர வேண்டாம் என்று ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
Manipur Violence: இரண்டு மணிப்பூரி பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து நடத்தும் வைரலான வீடியோவைப் பகிர வேண்டாம் என்று ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டை உலுக்கிய சம்பவம்:
மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கைள மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. மேலும், அவர்களை அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் மே 4ஆம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வெளியாகி சில மணிநேரங்களிலேயே மக்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் நடக்கும் அட்டூழியங்களுக்கும் அரசின் செயலற்ற தன்மைக்கும் கடுமையாகக் கண்டனங்களை தெரிவித்தன.
கைது:
இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹேராதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுளளது. மேலும், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களை நிர்வாணமாக ஒரு கும்பல் அழைத்துச் சென்ற நிலையில், இதுவரை ஒருவரை மட்டும் அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
Manipur CM N Biren Singh tweets, "After taking a Suo-motu cognisance of the incident immediately after the video surfaced, the Manipur Police swung to action and made the first arrest this morning. A thorough investigation is currently underway and we will ensure strict action… pic.twitter.com/CeZf7TWZIY
— ANI (@ANI) July 20, 2023
மத்திய அரசு நடவடிக்கை:
இந்நிலையில், இரண்டு மணிப்பூரி பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து நடத்தும் வைரலான வீடியோவைப் பகிர வேண்டாம் என்று ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளதால், சமூக ஊடக தளங்கள் இந்திய சட்டங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், ”மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது; எனது இதயம் கனத்துள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கு அவமானம். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.