Whatsapp Facebook Group: பிரிவினைவாத, மதவாதத்தை தூண்டும் வாட்ஸ்அப், பேஸ்புக் குரூப்கள்..உடனடியாக வெளியேற அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு
பிரிவினைவாத, நாட்டுக்கு எதிரான, மதவாத, பிளவை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை பரப்பிய வாட்ஸ்அப், பேஸ்புக் குரூப்களில் இருந்து வெளியேற அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மெய்தேயி, குக்கி பழங்குடி சமூகத்திற்கு இடையே வெடித்த இனக்கலவரம் நாட்டையே உலுக்கியது. அங்கு நடந்த மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஆதிக்க சமூகத்தை சேர்ந்த கும்பல், பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் இந்திய நாடாளுமன்றத்தையே புரட்டிபோட்டது.
நாட்டை புரட்டிபோட்ட மணிப்பூர் விவகாரம்:
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்கள் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை கிளப்பியது. மக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே, தங்களை அந்த கொடூர கும்பலிடம் அழைத்து சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலம் மணிப்பூரில் பிரச்னை எந்தளவுக்கு முற்றிவிட்டது என்பதை காட்டியது.
இதைத்தொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இனக்கலவரத்தின்போது அரசு அதிகாரிகளும், காவல்துறையும் சாதிய பாகுபாட்டுடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குறிப்பாக, மணிப்பூர் காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மெய்தேயி சமூகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், பெரிதும் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதற்கிடையே, மணிப்பூர் இனக்கலவரம் மாநிலம் முழுவதும் பரவுவதற்கு சமூகவலைதளங்களில் பரப்பப்பட்ட பொய்யான தகவல்களே காரணம் என தெரிய வந்துள்ளது.
வாட்ஸ்அப், பேஸ்புக் குரூப்களில் இருந்து வெளியேற அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு:
இந்த நிலையில், பிரிவினைவாத, நாட்டுக்கு எதிரான, மதவாத, பிளவை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை பரப்பிய வாட்ஸ்அப், பேஸ்புக் குரூப்களில் இருந்து வெளியேற மணிப்பூர் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, எந்தளவுக்கு பின்பற்றப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய அனைத்து துறைகளையும் மணிப்பூர் அரசு கேட்டு கொண்டுள்ளது.
அறிக்கை:
மணிப்பூரில் நிலைமை எப்படி இருக்கிறது, கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக மணிப்பூர் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில்தான், அரசு அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், "பிரிவினைவாத, தேச விரோத, அரசுக்கு எதிரான, சமூக விரோத, வகுப்புவாத, சமூகத்தை பிளவுபடுத்தும் செயலில் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக குரூப்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது, மாநிலத்தில் நிலவும் அமைதியான, சமூக நல்லிணக்கமான, சட்டம் ஒழுங்கு நிலைமையை பாதிக்கிறது.
இம்மாதிரியான குரூப்களில் உள்ளவர்கள், தவறான தகவல்கள், வெறுப்பு பேச்சு, வெறுப்பை தூண்டும் வீடியோக்களை பரப்பியுள்ளனர். அரசு ஊழியர்கள் பதிவிடக்கூடாத, பகிரக்கூடாத கருத்துகளை சில அரசு ஊழியர்கள் பதிவிட்டுள்ளனர். இம்மாதிரியான குரூப்களில் உறுப்பினராக இருப்பது அகில இந்திய நிர்வாக (நடத்தை) விதிகள், மத்திய சிவில் நிர்வாக (நடத்தை) விதிகள், 1964 ஆகியவற்றுக்கு எதிரானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.