Manipur Crisis : பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..தொடரும் இணை சேவை முடக்கம்..மணிப்பூர் அரசு உத்தரவு..!
மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது.
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது.
மணிப்பூரில் தொடரும் கட்டுப்பாடுகள்:
மாநில காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. ஆனால், வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட குகி சமூகத்திற்கு ஆதரவாக ராணுவம் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், இணைய சேவை முடக்கத்தை ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டித்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, பள்ளிகள் திறப்பையும் ஒத்திவைத்துள்ளது. ஜூலை 8ஆம் தேதி வரை, பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மணிப்பூர் அரசு வெளியிட்ட உத்தரவில், "மணிப்பூர் மாநிலத்தின் அதிகார வரம்பில் இருக்கும் பகுதிகளில் அமைதி மற்றும் பொது ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, ஐந்து நாட்களுக்கு அமலில் இருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்ய திட்டமிட்ட முதலமைச்சர்:
கலவரத்தை சரியாக கையாளாததால் முதலமைச்சர் பைரன் சிங், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இதனிடையே, தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார் பைரன் சிங். இது தொடர்பான தகவல் வெளியான நிலையில், மக்கள் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
பொது மக்களின் அழுத்தம் காரணமாக மனம் மாறிய பைரன் சிங், பதவி விலகும் முடிவை பைரன் சிங் திரும்ப பெற்றதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். முன்னதாக, ராஜினாமா கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்கு பைரன் சிங் புறப்பட்டதாகவும், ஆனால், இம்பாலில் உள்ள அவரது வீட்டில் வெளியே மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து திரும்பியதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கிடையே, இரண்டு நாள் பயணமாக மணிப்பூருக்கு சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்ட ராகுல் காந்தி, "மணிப்பூரில் நடந்த வன்முறையால் சொந்தங்களையும், வீடுகளையும் இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பதும் கேட்பதும் மனவேதனை அளிக்கிறது. நான் சந்திக்கும் ஒவ்வொரு சகோதரன், சகோதரி மற்றும் குழந்தையின் முகத்திலும் உதவிக்கான அழுகை இருக்கிறது.
மணிப்பூருக்கு இப்போது மிக முக்கியமாக தேவைப்படும் விஷயம் அமைதி. நமது மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது. அந்த இலக்கை நோக்கி நமது முயற்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.