4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இணைய சேவை.. இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மணிப்பூர்?
மணிப்பூர் முழுவதும் வன்முறை பரவுவதற்கு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களும் வதந்திகளுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த மே மாதம் 23ஆம் தேதி, இணைய சேவை முடக்கப்பட்டது.
மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் நாட்டையே உலுக்கியது.
நாட்டை உலுக்கிய மணிப்பூர் இனக்கலவரம்:
இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.
மணிப்பூர் முழுவதும் வன்முறை பரவுவதற்கு சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களும் வதந்திகளுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த மே மாதம் 23ஆம் தேதி, இணைய சேவை முடக்கப்பட்டது. அரசு ஒப்புதல் பெறப்பட்ட மொபைல் எண்களை தவிர்த்து அனைத்து மொபைல்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 140 நாட்களாக இணைய சேவை இன்றி மணிப்பூர் மக்கள் தவித்து வந்தனர்.
இணைய சேவை மீண்டும் தொடக்கம்:
இந்த நிலையில், மணிப்பூரில் இன்று காலை முதல் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் வெளியிட்டார். மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு எதிராக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சில இடங்களில் மட்டும் இணைய சேவை வழங்க உத்தரவிட்டது.
இனக்கலவரத்தின்போது, மணிப்பூர் முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் மனித நேயத்தையே கேள்விக்குள்ளாக்கியது. குஜராத் இனக்கலவரத்தை போன்று, அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.
மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் மெய்தி சமூக மக்கள், 53 சதவிகிதத்தினர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்கில் தான் வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம், குக்கி, நாகா இன மக்கள், மாநிலத்தின் மக்கள் தொகையில் 40 சதவிகிதம் உள்ளனர். இவர்கள், அடிப்படை வசதி கூட இல்லாத மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
மே மாதம் வெடித்த இனக்கலவரத்தை தொடர்ந்து, இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த ஒரு சில குக்கி சமூக மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கடந்த மே மாதம் வன்முறை வெடித்த பிறகு, குக்கி சமூகத்தை சேர்ந்த 5 குடும்பங்கள் மட்டுமே இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்தனர். அவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.