Manipur Assembly: பாலியல் வன்கொடுமை, உயிரிழப்புகள், சூறையாடப்பட்ட சொத்துகள்.. மணிப்பூரில் இன்று கூடுகிறது சட்டமன்றம்
இரு சமூகத்தினர் இடையேயான மோதலால் கலவர பூமியாக மாறிய மணிப்பூரில், பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது.
![Manipur Assembly: பாலியல் வன்கொடுமை, உயிரிழப்புகள், சூறையாடப்பட்ட சொத்துகள்.. மணிப்பூரில் இன்று கூடுகிறது சட்டமன்றம் Manipur Assembly To Convene 1-Day Session Today, Expected To Discuss Ethnic Divide And Violence Manipur Assembly: பாலியல் வன்கொடுமை, உயிரிழப்புகள், சூறையாடப்பட்ட சொத்துகள்.. மணிப்பூரில் இன்று கூடுகிறது சட்டமன்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/9799625d28857dee29cb75a00763346c1693283802111732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இரு சமூகத்தினர் இடையேயான மோதலால் கலவர பூமியாக மாறிய மணிப்பூரில், பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது.
மணிப்பூர் கலவரம்:
மணிப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இரு பிரிவினர்களும் கடும் தாக்குதலில் ஈடுபட்டதோடு, பொருட்களை சூறையாடுதல், வீடுகளை தீயிட்டு கொளுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகின. இதனால் தற்போது வரை 170 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதாக அரசு தரப்பு கூறி வருகிறது.
தொடரும் பதற்றம்:
ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்பு கூட இம்பால் மேற்கு மாவட்டத்தில் மூன்று வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அதோடு பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களையும் பறித்து சென்றது. இதனால், அங்கு பதற்றம் தணிந்தபாடில்லை.
இன்று சட்டப்பேரவை கூட்டம்:
இத்தகைய பரபரப்பான சூழலில், இன்று மணிப்பூர் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் ஒருநாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் சட்ட - ஒழுங்கு, இரு சமூகத்தினர் இடையேயான மோதல் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதனை ஏற்று மாநில அரசு இன்று ஒருநாள் சட்டப்பேரவையை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில், மணிப்பூர் வன்முறை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. அதோடு, இனக்கலவரம் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.
புறக்கணிப்பு:
இதனிடையே, ஒருநாள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் பங்கேற்கமாட்டோம் என குக்கி-ஜோமி பழங்குடியின அமைப்பை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த சமூகத்தினரை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.-க்கள் இந்த கூட்டத்தை தவிர்க்கின்றனர். மாநிலத்தின் சட்டமன்றம் இம்பாலில்தான் உள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் மெய்தி சமூகத்தினர் அதிகமாக வாழும் இம்பால் பகுதிக்கு செல்வது பாதுகாப்பனது அல்ல என தெரிவித்துள்ளனர். நாகா எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. சட்டசபை கூட்டத்தை நடத்த தடைவிதிக்க குக்கி-ஜோமி சமூகத்தினர் ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. பிப்ரவரி- மார்ச் மாதத்தில் பட்ஜெட்டிற்கு செசனுக்காக சட்டமன்றம் கூடியது. அதன்பின் தற்போது ஒருநாள் கூட இருக்கிறது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வன்முறை தொடர்பான பிரச்னைகளை எழுப்ப தீவிரம் காட்டி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)