Stan Swamy | இந்துத்துவ அமைப்புகளின் மிரட்டல்களைத் தாண்டி ஸ்டேன் சுவாமியின் பெயரைச் சூட்டும் கல்லூரி நிர்வாகம்!
இந்துத்துவ அமைப்புகள் மிரட்டினாலும் தங்களது கல்லூரியின் பூங்காவிற்கு பழங்குடியின உரிமைப் போராளி ஸ்டான் சுவாமியின் பெயரை சூட்டுவோம் என மங்களூரில் உள்ள கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
84 வயதான மனித உரிமை ஆர்வலட் ஸ்டேன் சுவாமி. இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழங் குடியினரின் சுயநிர்வாகம், நிலம், நீர், காடு சார்ந்த உரிமைகளுக்காக போராடியவர். பீமா கொரேகான் வழக்கில் தேசியப் புலனாய்வு அமைப்பின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக் கைதியாக மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவர் கைநடுக்கம் காரணமாக, உறிஞ்சிக் குடிப்பதற்குச் சிறையில் தனக்கு உறிஞ்சுகுழல் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அது மறுக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கும் ஆளான ஸ்டேன் சுவாமி கடந்த ஜூலை 5-ம் தேதி மரணமடைந்தார்.
இந்நிலையில் ஒரு கல்லூரி நிர்வாகம் அவரது பெயரை தங்களது கல்லூரியின் பூங்காவிற்கு வைக்க திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள புனித அலாய்சியஸ் கல்லூரியின் கொடேகர் பீரி வளாகத்தில் அமைந்துள்ளது ஒரு பூங்கா. இந்த பூங்காவிற்கு பெயர் சூட்டும் விழாவை கடந்த வியாழக்கிழமை நடத்த முடிவு செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். ஆனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் கர்நாடக மாநில வருகையையொட்டி இவ்விழா ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய கல்லூரியின் முதல்வர் பாதிரியார் மெல்வின் பிண்டோ, குடியரசுத் தலைவரின் வருகையையொட்டிய வேலைகளில் தாங்கள் மும்முரமாக இருப்பதாகவும், பூங்காவில் பெயரிடும் விழா காரணமாக எந்த பிரச்னையும் வேண்டாம் என்று போலீசார் கூறியதாக தெரிவித்தார்.
கல்லூரியின் பூங்காவிற்கு ஸ்டேன் சுவாமியின் பெயரை சூட்டும் கல்லூரி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி, பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கல்லூரி நிர்வாகம் விழாவை முன்னெடுத்துச் சென்றால், தங்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கல்லூரி வளாகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் கல்லூரி நிர்வாகம்தான் பொறுப்பு என தெரிவித்தார் வி.எச்.பி. தலைவர் சரண் பம்ப்வெல். இது தொடர்பாக போலிசில் புகாரும் ஏபிவிபி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிறுவனம் தேசபக்தியை ஊக்குவிக்கவிப்பதற்கு பதிலாக தேச துரோகத்தை மகிமைப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே, கல்லூரி நிர்வாகத்தை அச்சுறுத்திய இந்துத்துவா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல அமைப்புகளும் ஆர்வலர்களும் தட்சிண கன்னட மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், இந்துத்துவா குழுக்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தலையிட உரிமை இல்லை என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் உறுப்பினர்கள் நாடு முழுவதும் சிறுபான்மையினரை கொலை செய்வதிலும், கலவரங்களை நடத்துவதிலும், சிறுபான்மையினரை இரண்டாம் தர குடியுரிமைக்கு தள்ளுவதற்காக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
ஸ்டேன் சுவாமி தனக்கு எதிராக புனையப்பட்ட வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாகவும், அவர் சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அந்த கடிதத்தில், விளிம்புநிலையில் உள்ள சமூகங்களுடன் நிற்கும் ஒரு மனித உரிமை ஆர்வலருக்கு எதிரான அமைப்பு ரீதியான ஒடுக்குமுறையின் அடையாளமாக மாறியுள்ளது சுவாமியின் மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.