Bhwanipur Election Result | தன் சாதனையை தானே முறியடித்த மம்தா பானர்ஜி: அபார வெற்றி!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் மம்தா பானர்ஜி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் 84,512 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 58,832 வாக்குகளை கூடுதலாக வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 213 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. அந்த தேர்தலில் பாஜக 77 தொகுதிகளில் வென்றது. அந்தத் தேர்தலின்போது முடிந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெல்லுங்கள் என பாஜக மம்தா பானர்ஜிக்கு சவால்விடுத்தது. இதனையடுத்து சவாலை ஏற்றுக்கொண்டு மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.
சுவேந்து அதிகாரி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மம்தாவின் வலதுகரமாக இருந்தவர். ஆனால் தேர்தலுக்கு முன்பு வியூகம் வகித்து சுவேந்து அதிகாரியைத் தன்வசம் இழுத்துக் கொண்டது பாஜக. 213 தொகுதிகளில் வென்று நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியடைந்ததை பாஜகவினர் கிண்டலடித்து வந்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் மம்தா பானர்ஜி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் தேர்தலில் தோல்வி அடைந்ததால் 6 மாதத்துக்குள் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால்தான் மம்தாவால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.
இந்த சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவானிப்பூர் தொகுதியின் எம்எல்ஏ சோபன்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில்தான் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பாக ப்ரியங்கா டிப்ரேவால் போட்டியிட்டார். கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 57 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் 21 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் 84,512 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்காவைவிட 58,832 வாக்குகளைக் கூடுதலாக பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பாக போட்டியிட்ட ப்ரியங்கா டிப்ரேவால் 25680 வாக்குகளைப் பெற்றார்.
2011ம் ஆண்டு இதே பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி 54,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
முன்னதாக பவானிபூர் தொகுதியில் மம்தா போட்டியிடுவதால், அவருக்கு எதிராக வேட்பாளர் யாரையும் நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.