Accreditation Education institutes: உயர் கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம்: வருகிறது புதிய மாற்றம்! நோக்கம் என்ன?
Accreditation Higher Education institutes: இந்திய உயர்கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பதில் இனி புதிய நடைமுறை பின்பற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
Accreditation Higher Education institutes: இந்திய உயர்கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பதில் இனி கிரேட் முறை பின்பற்றப்படாது என கூறப்படுகிறது.
இனி கிரேட் முறை இல்லை:
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் (HEIs) இனி அங்கீகாரச் செயல்பாட்டின் போது கிரேடுகளைப் பெறாது என கூறப்படுகிறது. மாறாக, அவை "அங்கீகாரம் பெற்றவை அல்லது அங்கீகாரம் பெறாதவை" என்று மட்டுமே இனி வகைப்படுத்தப்படும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நிர்வாகமானது "முதிர்வு அடிப்படையிலான தர அங்கீகாரத்தை (நிலை 1 முதல் 5 வரை) பயன்படுத்த உள்ளது. இது “பலதுறை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான உலகளாவிய சிறந்த நிறுவனம்” என்ற மிக உயர்ந்த நிலையை (5ம் நிலை) அடைய கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் என கருதப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கை:
தேசிய கல்விக் கொள்கை 2020 ஆனது, 2035 ஆம் ஆண்டிற்குள் உயர்கல்வி நிலையங்களில் மொத்த சேர்க்கையை 50 சதவிகிதத்தை இலக்காக கொண்டுள்ளது. இதையொட்டி, மத்திய கல்வி அமைச்சகம் (MoE) இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், IIT கவுன்சிலின் நிலைக்குழுவின் தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை நவம்பர் 2022 இல் அமைத்தது. உயர்கல்வி நிறுவனங்களுக்கான மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்கு சீர்திருத்தங்களை முன்மொழிய இக்குழு அமைக்கப்பட்டது. பல கட்ட ஆய்வு பணிகளுக்குப் பிறகு இந்த குழு, கடந்த 16ம் தேதி தங்களது அறிக்கையை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் சமர்பிக்கப்பட்டது.
உயர்கல்வியில் வரும் சீர்திருத்தங்கள் என்ன?
இந்நிலையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கான காலமுறை ஒப்புதல், மதிப்பீடு, அங்கீகாரம் மற்றும் தரவரிசையை வலுப்படுத்தும் வகையில் மாற்றத்தக்க சில சீர்திருத்தங்களை ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது. உயர்கல்வி நிலையங்களின் பங்கேற்பு மற்றும் அங்கீகார நிலைகளை உயர்த்துவதற்கான திட்டங்களை வழிகாட்டுவதோடு, ஊக்குவிப்பதிலும் இந்த பரிந்துரைகள் கவனம் செலுத்துகின்றன. புதிய செயல்முறையின் சிறப்பம்சம், உலகளவில் பலர் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப "பைனரி அங்கீகாரத்தை" செயல்படுத்துவதாகும். இதன் மூலம், தற்போது நடைமுறையில் இருக்கும் கிரேட் முறை இனி பின்பற்றப்படாது. உயர்கல்வி நிறுவனங்கள் "அங்கீகாரம் பெற்றவை அல்லது அங்கீகாரம் பெறாதவை" என்று மட்டுமே வகைப்படுத்தப்பட உள்ளன.
புதிய ”அங்கீகரிக்கும்” நடைமுறை என்ன?
உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரமானது இனி, 1 முதல் 5 வரையிலான நிலைகளின் அடிப்படையில் வழங்கப்படும். இது உயர் கல்வி நிறுவனங்கள் தங்களை பரந்து, விரிந்து மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது. 1 முதல் 4 வரையிலான நிலைகள் உயர்கல்வி நிறுவனங்களை தேசிய அளவில் சிறந்ததாக பட்டியலிட, 5ம் நிலை என்பது சர்வதேச தரத்திலான உயர்கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரத்த வழங்குகிறது” என மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய நடைமுறையின் நோக்கம் என்ன?
ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின்படி, பைனரி மற்றும் முதிர்வு அடிப்படையிலான தரப்படுத்தப்பட்ட அங்கீகாரத்திற்கான அளவீடுகள் உயர்கல்வி நிறுவனங்களின் வெவ்வேறு பண்புக்கூறுகள், விளைவுகள் மற்றும் தாக்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது. புதிய செயல்முறையானது நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நோக்கம் மற்றும் பாரம்பரியம்/மரபு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்துகின்றன. வழிகாட்டுதல் மற்றும் கையாளுதல் மூலம் கிராமப்புற மற்றும் தொலைதூர இருப்பிட நிறுவனங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.