Chennai to Surat 6 lane project : 6 வழிச்சாலை... 120 கி.மீ வேகத்தில் நாசிக்.! சென்னை மக்களுக்கு குஷியான திட்டம் - அப்டேட் இதோ
Chennai to Surat 6 lane project : சென்னை-சூரத் 1,271 கி.மீ நீளம் வரை அமைக்கப்படவுள்ள 6 வழிச்சாலை திட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க சூப்பர் பிளான்
நாளுக்கு நாள் மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை போன்ற நகரங்களில் மட்டுமில்லாமல் தேசிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. எனவே குறிப்பிட்ட இடத்திற்கு செல்லவே பல மணி நேரங்கள் ஆகும் நிலை உள்ளது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து மத்திய மற்றும் தென் இந்தியாவை இணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
சென்னை டூ சூரத் 6 வழிச்சாலை திட்டம்
இதன் படி, தென்னிந்தியாவில் சாலை இணைப்பை மேம்படுத்தும் முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி 2023 ஆம் ஆண்டு சூரத்-நாசிக்-சென்னை விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த சாலையானது 6 வழிச்சாலையாக சென்னை-சூரத் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் 1,271 கி.மீ நீளம் வரை ரூ.50,000 கோடி மதிப்பீட்டில் திட்டம் வடிவமைக்கப்பட்டது. சூரத், நாசிக், சோலாப்பூர், கலபுராகி, கர்னூல், கடப்பா வழியாக திருப்பதி போன்ற நகரங்கள் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்தால் குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் வகையில் சாலை திட்டம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட இருந்த 6 வழிச்சாலையான இந்த விரைவுச்சாலை திட்டமானது தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சாலை திட்டம் மாற்றம்- சென்னை டூ நாசிக்
இதன் படி சூரத் வரை திட்டமிட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டம் தற்போது நாசிக் வரை மட்டுமே அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட 1271 கிலோ மீட்டருக்கு பதிலாக 900 கி.மீட்டர் தூரத்திற்கு மட்டுமே 6 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சூரத்–நாசிக் இடையே நிலம் கையகப்படுத்தலில் பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டதையடுத்து இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
120 கி.மீட்டர் வேகத்தில் பயணம்
எனவே 6 வழிச்சாலை திட்டத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த 6 வழிச்சாலை திட்டத்தால் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயக்க முடியும். எனவே சென்னையில் இருந்து நாசிக்கிற்கு குறைந்த மணி நேரத்தில் செல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.





















