Train Accident: ரயில் பெட்டியில் திடீரென வந்த புகை... தப்பிக்க நினைத்த 12 பேர் மற்றொரு ரயில் மோதி பலி?
இந்த ரயில் விபத்தானது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஜாரியா ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ரயில் விபத்தானது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஜாரியா ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு படையினரும், ஆம்புலன்ஸ்களும் வந்துள்ளன. இரவு நேரம் என்பதால் ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பதில் சற்று சிக்கல் நிலவுவதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் வெளியான முதல்கட்ட தகவலின்படி, பயணிகள் ரயில் ஒன்றில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அதில் பயணித்த பொதுமக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வெளியே குதித்துள்ளனர். அப்போது அருகிலுள்ள தண்டவாளத்தில் எதிர்புறத்தில் ரயில் வந்துள்ளது. அந்த ரயில் மோதியதில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. . இந்த விபத்து சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nearly 12 people have lost their lives in a #TrainAccident near Kalijhariya Halt under the Asansol railway division in #Jamtara district. #Jharkhand 🥺 pic.twitter.com/rItIoMTS7x
— Sumit (@YourBuddy1129) February 28, 2024
ஆனால் ரயிலில் தீப்பிடித்த செய்தியை கிழக்கு ரயில்வே அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் வித்யாசாகரில் இருந்து கசிடர் பகுதிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் ஒரு பெட்டியில் புகை வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயத்தில் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். ரயில் நடுவழியில் நின்ற நிலையில் அவசர அவசரமாக இறங்கி சிலர் மற்றொரு தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது அந்த பாதையில் வந்த ரயில் இவர்கள் மீது மோதியுள்ளது. இதுவரை இறந்த இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இருள் சூழ்ந்ததால் இன்னும் எத்தனை பேர் இறந்து போயிருப்பார்கள் என தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஜார்கண்ட் சுகாதார அமைச்சர் பன்னா குப்தா, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர ஜம்தாரா துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார், மேலும் காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், சிகிச்சையில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.