இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் பூகம்பம்.. ஷிண்டே முதல்வர் பதவிக்கு ஆபத்தா?
அடுத்த அதிரடிக்கு தயாராகியுள்ளது மகாராஷ்டிர அரசியல். முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் திருப்புமுனைக்கு பஞ்சம் இல்லாமல் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சிவசேனா பிளவுப்பட்டதை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவு பட்டுள்ளது. பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது போல், பாஜக - சிவசேனா அரசாங்கத்தில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இணைந்துள்ளது.
திருப்புமுனைக்கு பஞ்சம் இல்லாமல் அதிரடி மாற்றங்கள்:
மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவியேற்றார். அவருடன், அக்கட்சியின் தேசிய தலைவரான சரத் பவாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் திலீப் வால்ஸ்-பாட்டீல், மூத்த தலைவர்கள் சாகன் புஜ்பால், ஹசன் முஷ்ரிப் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
இந்த அரசியல் மாற்றம் தேசிய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த அதிரடிக்கு தயாராகியுள்ளது மகாராஷ்டிர அரசியல். முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதில் அஜித் பவாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து வரிவாக பேசியுள்ள முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, "மகாராஷ்டிரா அரசாங்கத்தில் விரைவில் பெரிய மாற்றம் நிகழ உள்ளது. அது, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிலிருந்தே தொடங்கும். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி ஏக்நாத் ஷிண்டே கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவுக்கு புதிய முதலமைச்சர்?
அஜித் பவாரும் மற்ற 8 என்சிபி எம்எல்ஏக்களும் அரசாங்கத்தில் இணைந்ததால் ஷிண்டேவின் முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம்" என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, "பதவி விலகும் திட்டம் எதுவும் இல்லை. என்சிபி அதிருப்தியாளர்களால் சிவசேனாவில் எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.
அரசாங்கத்தில் தேசியவாத காங்கிரஸ் இணைந்ததில் இருந்து, ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த 20 எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரே அணியில் சேர பேசி வருவதாக உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ஏக்நாத் ஷிண்டே மீது நம்பிக்கை வைத்திருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "எல்லோரையும் அரவணைத்து அழைத்து சென்று பொறுமையாக இருப்பதே அவரது தலைமைக்கு எடுத்துக்காட்டு.
நேற்று, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என அனைவரும் ஏக்நாத் ஷிண்டே மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் (அதிருப்தி அறிக்கைகள்) ஏக்நாத் ஷிண்டேவை இழிவுபடுத்தவே செய்யப்படுகின்றன" என்றார்.
தற்போது, மகாராஷ்டிராவின் முதலமைச்சராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதலமைச்சர்களாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரும் பதவி வகித்து வருகின்றனர்.