'தெருநாய்களை கட்டுப்படுத்த முடியலயா..? அஸ்ஸாமுக்கு அனுப்புங்க சாப்பிடுவாங்க..' எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் நாய்கள் தெருவில் நடக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் பெரும் பிரச்சினையாக இருக்கின்றன.
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர் பிரச்னையாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் இந்த பிரச்னை பெரிய விவகாரமாக மாறியுள்ள நிலையில், அம்மாநில சட்டப்பேரவையில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
பிரச்னையாக மாறிய தெரு நாய் பெருக்கம்:
தெரு நாய் பெருக்கம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எம்எல்ஏக்கள் பிரதாப் சர்நாயக் மற்றும் அதுல் பட்கல்கர் கொண்டு வந்தனர். அப்போது பேசிய பிரஹர் ஜனசக்தி கட்சி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பச்சுகாடு சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்தார்.
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றை அஸ்ஸாம் மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அங்கிருக்கும் உள்ளூர் மக்கள் அதை சாப்பிடுவார்கள் என சர்ச்சையாக பேசினார்.
எம்எல்ஏ சர்ச்சை கருத்து:
"அஸ்ஸாமில் தெருநாய்களுக்கு கிராக்கி அதிகம் உள்ளது. 8,000 ரூபாய் வரை விற்பனையாகின்றன. மாநிலத்தில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அவற்றை அஸ்ஸாமுக்கு அனுப்ப வேண்டும். இதை, சோதனை முயற்சியாக ஒரு நகரத்தில் இருந்து தொடங்க வேண்டும்" என பச்சு காடு தெரிவித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் காடுவின் கருத்துக்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். அவரின் யோசனை மனிதாபிமானமற்றது என்றும் மூர்க்கத்தனமாக இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளனர்.
மோசமாக பேசிய பாஜக எம்எல்ஏ:
இதேபோன்ற சர்ச்சை கருத்தை ஜார்க்கண்ட் பாஜக எம்எல்ஏ பிரஞ்சி நாராயணாவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். பொது மக்கள் மீது தெரு நாய்கள் தாக்குதல் நடத்துவது குறித்து பேசிய அவர், "மாநில அரசால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாவிட்டால், நாகாலாந்து மக்களை அழைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்" என்றார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டதொடரின்போது, பொகாரோ தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான பிரஞ்சி, "ராஞ்சியில் உள்ள நாய் கடி மையத்திற்கு மட்டும் தினமும் சுமார் 300 பேர் வந்து செல்கின்றனர்.
நாய் மற்றும் செல்லப்பிராணி பிரியர்கள் உரிமம் இல்லாமல் அவற்றை தத்தெடுக்கின்றனர். பொகாரோவில் தெருநாய்களைப் பிடித்து, சிகிச்சை அளிப்பதற்கும், கருத்தடை செய்வதற்கும் எந்த ஏற்பாடும் இல்லை" என்றார்.
பெரும் பிரச்சினையா?
குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் நாய்கள் தெருவில் நடக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் பெரும் பிரச்சினையாக இருக்கின்றன. வெளிச்சம் இல்லாத தெருக்களில் செல்லும் ஒருவர் நாய் தொல்லையில்லாமல் கடந்து போக முடியாத நிலை உள்ளது. ரயில் மற்றும் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் நாய்களால் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வாகனங்களில் செல்பவர்களை விரட்டிச் செல்வதால் பல சமயங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும்வரை அவற்றை அகற்றாமல் இருப்பதால் நாய்கள் உயிர்வாழத் தேவையான உணவு அதிலிருந்தே கிடைக்கிறது. இதனால் நாய்களின் எண்ணிக்கை பெருகுகிறது. உணவுப் பொருட்களைத் தேடி வரும் தெரு நாய்கள் அப்பகுதியில் இருப்பவர்களுக்கு தொல்லையாக மாறுகின்றன.