Maharashtra landslide: நிலச்சரிவில் சிக்கி விலங்குகள் அழுகியதால் துர்நாற்றம்.. 78 பேர் காணாமல் போனதால் தொடரும் அச்சம்!
நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கிய விலங்குகள் உயிரிழந்துள்ளதால் அதன் துர்நாற்றம் கிராமத்தில் வீசுவதாகவும், அதனால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் பலியான நிலையில், காணாமல் போன 78 பேரை தேடும் பணி ஞாயிற்று கிழமையை ஒட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்தது. கடந்த புதன் கிழமை ராய்காட் மற்றும் பார்கர்ம மாவட்டங்களில் அதிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி மும்பையில் இருந்து 80கி.மீ. தூரத்தில் இருக்கும் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 17 வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவிலும், இடிபாடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. காணாமல் போன 78 பேரை கண்டறியும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகள் இடிந்து விழுந்த பகுதிகளில் தோண்ட தோண்ட சடலங்கள் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஞாயிற்று கிழமை என்பதால், மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிப்பு பகுதியில் அவசர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு மக்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணியில் துர்திஷ்டவசமாக ஒரு தீயணைப்பு துறை வீரர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்துக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததாலும், மழைபெய்து வருவதாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கிய விலங்குகள் உயிரிழந்துள்ளதால் அதன் துர்நாற்றம் கிராமத்தில் வீசுவதாகவும், அதனால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்கவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அம்மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.