"மாட்டுக்கறி வச்சிருக்கியா" முஸ்லிம் முதியவரை சரமாரியாக தாக்கிய சக பயணிகள்.. ரயிலில் பரபரப்பு!
ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் முதியவர் ஒருவர் சக பயணிகளால் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் முதியவர் ஒருவர் சக பயணிகளால் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாட்டுக்கறி தொடர்பாக எழுந்த சர்ச்சை: இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால், முதியவரை தாக்கும் வீடியோ காட்சி, தற்போதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சூழலில், இதுகுறித்து விசாரணை நடத்த ரயில்வே போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
ரயிலில் 10க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒரு முதியவரை தாக்குவதும், மோசமான வார்த்தைகளால் திட்டுவதும் வைரலாகி வரும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீஸ் தரப்பில் கூறுகையில், "இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஹாஜி அஷ்ரப் முனியர் என்பது தெரிய வந்துள்ளது.
ஜல்கான் மாவட்டத்தில் அவர் வசித்து வருகிறார். கல்யாணில் உள்ள தனது மகளின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, இகத்புரி அருகே மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் சக பயணிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முதியவரை தாக்கிய பயணிகள்: வீடியோ குறித்து தெரிய வந்ததை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரை அடையாளம் கண்டுள்ளோம். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இதுகுறித்து இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை" என தெரிவித்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 48வது பிரிவானது பசுக்கள், கன்றுகள் போன்ற இழுவை கால்நடைகளை கொல்வதைத் தடை செய்கின்றது. உச்ச நீதிமன்றம் 2005 ஆம் ஆண்டு பசுவதை தடுப்பு சட்டத்தை உறுதி செய்தது.
Haji Ashraf Munyar from a village in Jalgaon District travelling in a train to Kalyan to meet his daughter was abused and badly beaten up by goons in a train near Igatpuri alleging him of carrying beef. pic.twitter.com/uOr3vlqBqB
— Mohammed Zubair (@zoo_bear) August 30, 2024
உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பசுவதை தடுப்பு சட்டம் அமலில் உள்ளது. சில மாநிலங்கள் இதனை அமல்படுத்தவில்லை. இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட மாநிலங்களில் அவ்வப்போது பசுபாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல்களும், கொலைகளும், கைது படலமும் நடந்துள்ளது.