Madhya pradesh: ஓட ஓட விரட்டிய ஆற்று வெள்ளம்! அடித்து சென்றும் ஆசை மகனுக்காக மீண்டு வந்த சிங்கப்பெண்..!
மத்தியப் பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பெருக்கெடுத்த ஆற்றைக் கடக்கும்போது அடித்துச் செல்லப்பட்ட 35 வயதுப் பெண் 16 கி.மீ தொலைவில் மரக்கட்டை ஒன்றில் ஒட்டிக் கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து எட்டு மணி நேர முயற்சிக்குப் பிறகு மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தின் பதாரியாவை சேர்ந்தவர் 35 வயதான சோனம் டாங்கி. இவர் தனது சகோதரனுடன் பதாரியாவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாலை 6 மணியளவில் பாரி காட் மேம்பாலத்தை கடக்க முயன்றபோது பைக் சறுக்கியது. இதில், எதிர்பாராத விதமாக சோனம் ஆற்றில் தவறி விழுந்தார். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், வெகுதூரத்துக்கு சோனம் அடித்து செல்லப்பட்டார்.
மேம்பாலத்தில் இருந்து சுமார் 5 கிமீ அடித்து செல்லப்பட்ட சோனம், கஞ்ச் என்ற பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் பாலத்தின் கீழ் ஒரு இரும்பு கம்பியை பிடித்துள்ளார். தான் இறந்து விட்டால் தனது 8 வயது மகனின் எதிர்காலம் என்னவாகும் என நினைத்தார். அவனுக்காக வாழ்த்தே தீர வேண்டும் என வைராக்கியம் கொண்டார். தைரியத்தை வரவழைத்து கொண்டு தொடர்ந்து கம்பியை பிடித்தபடியே ஆற்று நீருடன் போராடினார்.
மேலும் அவரைக் காப்பாற்ற ஒரு மீட்புக் குழு அனுப்பப்பட்டது. ஆனால் வலுவான நீரோட்டங்கள் காரணமாக முடியவில்லை. இதையடுத்து, ஐந்து நீர்மூழ்கி வீரர்கள் இறுதியாக அதிகாலை 4.30 மணியளவில் ஐந்தாவது முயற்சியில் அந்தப் பெண்ணை பிடித்து லைஃப் ஜாக்கெட்டைக் கொடுத்து படகு அருகில் இழுத்தனர்.
படகு கரையை நோக்கி நகரத் தொடங்கியபோது, பலத்த நீரோட்டத்தில் படகு கவிழ்ந்தது. ஆற்றில் விழுந்த மீட்பு குழுவினர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், சோனம் மீண்டும் அடித்து செல்லப்பட்டார். ஆனால், அவர் லைப் ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த முறை ராஜ் கேடாவில் மரம் ஒன்றில் சிக்கி கொண்டார். மேலும், படகு கவிழ்ந்த இடத்திலிருந்து சுமார் 16 கிமீ தொலைக்கு அவர் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதுகாப்பு குழுவினர் அந்த ஆற்றை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சோனம் குறித்து தகவல் கொடுத்தனர். ராஜ்கேடா கிராமத்தில் உள்ள மக்கள் அந்த பெண்ணை மரம் இடுக்கில் கண்டறிந்து ஒரு குழாய் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட அந்த பெண் தாழ்வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீண்டு வந்த அந்த பெண் அவர்களுக்கு நன்றி கூறி, தனது சகோதரருக்கு ராக்கி அணிவித்து மகிழ்ந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்