Electricity Bill Defaulters: கரண்ட் பில் கட்டாமல் ‛டிமிக்கி’- முதலிடம் பிடித்த வருவாய்த்துறை அமைச்சர்!
மத்திய பிரதேசத்தில் மின்கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியலில் வருவாய்த்துறை அமைச்சர் முதலிடம் பிடித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் மின்துறையினர் மின்கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியல் அந்த மாநிலத்தில் மிகப்பெரும் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியலில் முதலிடத்தில் அந்த மாநில அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத் உள்ளார். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் வருவாய்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். அமைச்சர் கோவிந்த்சிங் ராஜ்புத் மின்கட்டண நிலுவையாக ரூபாய் 84 ஆயிரத்து 388 ரூபாய் வைத்துள்ளார்.
அமைச்சர் மட்டுமின்றி அமைச்சரின் சகோதரரும், மின்கட்டணம் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். அவரது சகோதரர் குலாப்சிங் ராஜ்புத்தும் ரூபாய் 34 ஆயிரத்து 667 மின்கட்டண பாக்கி செலுத்த வேண்டியுள்ளது.
மேலும், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மாளிகை ரூபாய் 11 ஆயிரத்து 445 மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. வழக்கறிஞர்களுக்கான வக்கீல்சந்த் அலுவலகம் ரூபாய் 30 ஆயிரத்து 209 மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் ரூபாய் 23 ஆயிரத்து 428 மின்பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. எஸ்.ஏ.எப். 16வது பட்டாலியன் அலுவகம் சார்பில் ரூபாய் 18 ஆயிரத்து 650 நிலுவை செலுத்த வேண்டியுள்ளது.
மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய மாநில அமைச்சரே மின்கட்டணம் செலுத்தாமல் இழுத்தடித்து வந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே ஆளுங்கட்சி மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் வருவாய்த்துறை அமைச்சர் கோவிந்த் ராஜ்புத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மின்வாரிய பொறியாளர் எஸ்.கே.சின்ஹா கூறும்போது, நுகர்வோர்களுக்கு அழைப்பு மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் நினைவுபடுத்தி உள்ளோம். அவர்கள் மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மின்கட்டணத்தை செலுத்தும் திறன் இருந்தும் மின்கட்டணம் செலுத்தாமல் இருந்தால் அவர்களது மின்கட்டணம் துண்டிக்கப்படும். சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க : 83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!
மேலும் படிக்க : ரெட்டைக் கதிரே....! ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு மின் அலுவலகத்தில் வேலை கொடுத்த பஞ்சாப் அரசு
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்