பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண்ணுக்கு அடி உதை! நேரில் அழைத்து ஆறுதல் கூறிய முதலமைச்சர்!
பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண்ணை அவரது உறவினரே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக அசுர வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண்:
இந்த நிலையில், பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண்ணை அவரது உறவினரே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாமிய பெண் சமீனாவை நேரில் அழைத்து சந்தித்துள்ளார் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்.
மத்திய பிரதேச முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்த சமீனா, தனக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி வலியுறுத்திள்ளார். இதையடுத்து, சமீனாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என சிவராஜ் சிங் சவுகான் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சமீனா கூறுகையில், "என் குழந்தைகள் மீது அவர் காட்டிய அக்கறையின் காரணமாக மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பேன். நான் பாஜகவுக்கு வாக்களித்ததை அறிந்த எனது மைத்துனர் ஜாவேத் என்னை தாக்கினார். சிவராஜ் சிங் சவுகானின் கட்சிக்கு என வாக்களித்தாய் என அவர் என்னிடம் கேட்டார்.
நேரில் அழைத்து ஆறுதல் கூறிய முதலமைச்சர்:
முதலமைச்சருடனான என் சந்திப்பு சிறப்பாக இருந்தது. நானும் என் குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வேன் என அவர் எனக்கு (சிவராஜ் சிங்) உத்தரவாதம் அளித்துள்ளார். நான் விரும்பியபடி எனது வாக்குரிமையைப் பயன்படுத்துகிறேன். அரசியலமைப்பு நாம் விரும்பும் எவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. சவுகான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் தான் பாஜகவுக்கு வாக்களித்தேன்" என்றார்.
இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்பதில் தொடர் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக முதலமைச்சர் பொறுப்பு வகித்து வரும் சிவராஜ் சிங் சவுகான், முதலமைச்சராக நீடிப்பாரா? அல்லது வேறு ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படுமா? என்பதில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது.
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பாஜக தேர்தலை சந்தித்தது. தேர்தலில், மூன்று மத்திய அமைச்சர்கள் உள்பட 7 எம்பிக்களை பாஜக களம் இறக்கியது. இதன் மூலம், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஓரங்கட்டப்படுகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால், மக்கள் மத்தியில் சிவராஜ் சிங் சவுகானுக்கு இருந்த செல்வாக்கு பாஜகவின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அவருக்கு முதலமைச்சர் பதவி தருவதில் கட்சி மேலிடம் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக, மத்திய அமைச்சர்களில் எவரேனும் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி தரப்படும் எனக் கூறப்படுகிறது.