(Source: ECI/ABP News/ABP Majha)
தூம் பட பாணியில் திருட்டு.. 15 கோடி ரூபாய் தங்கத்திற்கு ஸ்கெட்ச்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அருங்காட்சியகத்தில் இருந்து 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் படமான 'தூம் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன் கதாபாத்திரம் திருடுவது போன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு நபர் அருங்காட்சியகத்தில் இருந்து 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூம் பட பாணியில் திருடிவிட்டு சிக்கி கொண்ட நபர்: ஆனால், யாரும் எதிர்பாராத திருப்புமுனையாக அருங்காட்சியகத்தில் திருடிவிட்டு அங்கேயே மயக்கமடைந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். பழங்கால தங்க நாணயங்கள் மற்றும் நகைகள் போன்ற விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் அவருக்கு அருகில் கிடந்தன.
திருடுவதை தொழிலாக செய்து வருபவர் வினோத் யாதவ். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை டிக்கெட் வாங்கி கொண்டு அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துள்ளார். அருங்காட்சியகம் மூடப்படும் வரை உள்ளேயே மறைந்திருந்துள்ளார்.
பின்னர், இரண்டு கேலரி அறைகளை உடைத்து தொல்பொருட்களை திருடியுள்ளார். திங்களன்றும் அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து, செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
நடந்தது என்ன? ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கண்ணாடி உடைந்து சிதறி இருந்ததும் பல மதிப்புமிக்க பொருட்கள் மாயமானதும் அவர்களுக்கு தெரிய வந்தது. அருங்காட்சியத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த வளாகத்தில் சோதனை நடத்தினர்.
தேடுதலின் போது, ஹால்வேயில் திருடப்பட்ட கலைப்பொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பைக்கு அருகில் ஒரு நபர் மயங்கிக் கிடப்பதைக் கண்டனர். அந்த பையில் குப்தர் காலத்து தங்க நாணயங்களும், ஆங்கிலேயர் மற்றும் நவாப் காலத்து நகைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பிற பொருட்களும் இருந்தன.
திருடிய பொருள்களுடன் தப்பிக்க முயன்றபோது 23 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அவரது காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) ரியாஸ் இக்பால் கூறுகையில், "திருடிவிட்டு சுவர் மீது அந்த நபர் குதிக்க முயன்றதாகத் தெரிகிறது. ஆனால், கீழே விழுந்துவிட்டார். இதனால், அவருக்கு காயம் ஏற்பட்டது.
அருங்காட்சியகத்தில் இருந்து 50 கைரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்திற்கு வெளியே அவருக்கு யாரோ உதவி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அவரிடம் மீட்கப்பட்ட தலா 50 முதல் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயங்கள், 8 முதல் 10 கோடி ரூபாய் மதிப்பிலானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.