மோடி காலடியில் இந்திய ராணுவம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்!
இந்திய ராணுவத்தை சிறுமைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார் மற்றொரு பாஜக தலைவர். பிரதமர் மோடியின் காலடியில் விழுந்து இந்திய ராணுவம் தலைவணங்குவதாக மபி துணை முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான ஜகதீஷ் தேவ்தா கூறியுள்ளார்.

கர்னல் சோபியா குரேஷி குறித்து பாஜக தலைவர் சமீபத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக மற்றொரு பாஜக தலைவர், இந்திய ராணுவத்தை சிறுமைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். பிரதமர் மோடியின் காலடியில் விழுந்து இந்திய ராணுவம் தலைவணங்குவதாக மத்தியப் பிரதேச துணை முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான ஜகதீஷ் தேவ்தா கூறியுள்ளார். இது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"போற்றி பாடடி பெண்ணே.. பிரதமர் காலடி மண்ணே"
பாதுகாப்பு பயிற்சிக்காக வந்த தன்னார்வலர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய பிரதேச துணை முதலமைச்சர் ஜகதீஷ் தேவ்தா, "பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவதையும், அவர்களின் மதம் அடையாளம் காணப்படுவதையும், பெண்களை தனியே ஒதுக்கிவிட்டு, ஆண்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்படுவதையும் நாம் கண்டிருக்கிறோம்.
பயங்கரவாதிகளுக்கும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் எதிராக நாம் பழிவாங்கும் வரை இந்த நாட்டு மக்கள் ஓய மாட்டார்கள். இன்று, முழு நாடும், ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் அவர் எடுத்த வலுவான நடவடிக்கைக்காக அவர் அளித்த பதிலடிக்காக தலைவணங்குகிறது. தயவுசெய்து அவருக்கு ஒரு பெரிய கரம் கொடுங்கள்" என்றார்.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பாஜக தலைவர்கள்:
இதேபோன்று, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து விவரித்த கர்னல் சோபியா குரேஷியை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சகோதரி எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார் விஜய் ஷா.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை குறித்த விவரங்களை நாட்டு மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் விளக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவரங்களை சிறப்பாக விளக்கியவர் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி கர்னல் சோபியா குரேஷி. உலக நாடுகளே உற்று கவனித்த செய்தியாளர் சந்திப்பை சிறப்பாக கையாண்டு பாராட்டை பெற்றார் சோபியா குரேஷி. இப்படி, நாடே பெருமிதத்துடன் பார்த்த சோபியா குரேஷி குறித்து இழிவாக பேசியிருந்தார் மத்தியப் பிரதேச பழங்குடி விவகாரங்கள் துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான விஜய் ஷா.





















