Pragya Thakur Controversy: இந்துக்கள் அல்லாதோர் வீடுகளுக்கு மகள் சென்றால் காலை உடையுங்கள்“: பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு
இந்துக்கள் அல்லாதவர்கள் வீடுகளுக்கு மகள் சென்றால், அவரது கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும் என்று, முன்னாள் எம்.பி பிரக்யா தாக்கூர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்கள் அல்லாதவர்கள் வீடுகளுக்கு மகள் சென்றால், அவரது கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும் என்று, மத்திய பிரதேச மாநிலம் போபால் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர்
பாஜக முன்னாள் எம்.பி-யான பிரக்யா சிங் தாக்கூரின் பேச்சுக்கள் அவ்வப்போது சர்க்கைகளை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், போபாலில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு செல்லும் மகள்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், கீழ்ப்படியாத மற்றும் நமது மதிப்புகளை பின்பற்றாத மகள்களின் கால்களை உடைக்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியுள்ளார். “எங்கள் பெண்கள் ஒரு இந்து அல்லாத ஆணிடம் செல்ல முயன்றால், அவளுடைய கால்களை உடைக்க தயங்காதீர்கள். உங்கள் குழந்தையின் நன்மைக்காக, நீங்கள் அவர்களை அடிக்க வேண்டியிருந்தால், தயங்காதீர்கள். பெற்றோர் குழந்தைகளை தண்டிக்கும் போது, அவர்கள் சிறந்த எதிர்காலத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள். அவர்களை துண்டு துண்டாக கிழிக்க அல்ல“ என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு மகள் பிறந்த உடன், தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்து, லட்சுமி வீட்டிற்குள் வந்திருப்பதாக சொல்கிறார்கள். எல்லோரும் அவர்களை வாழ்த்துகிறார்கள். ஆனால், அவள் வளர்ந்ததும், அவள் வேறொருவரின் மனைவியாக(வேறொரு மதத்தைச் சேர்ந்த) செல்கிறாள்“ என்று அவர் கூறியுள்ளார்.
அதோடு, “மதிப்புகளை பின்பற்றாத, பெற்றோரின் பேச்சை கேட்காத, பெரியவர்களை மதிக்காத, வீட்டை விட்டு ஓடிப்போகத் தயாராக இருக்கும் பெண்கள் மீது, பெற்றோர்கள் "இன்னும் விழிப்புடன்" இருக்க வேண்டும்“ என்றும் பிரக்யா தாக்கூர் அழைப்பு விடுத்தார்.
மேலும், "அவர்களை உங்கள் வீடுகளை விட்டு வெளியேற விடாதீர்கள், அடிப்பதன் மூலமோ, அவர்களுக்கு விளக்குவதன் மூலமோ, அவர்களை அமைதிப்படுத்துவதன் மூலமோ, நேசிப்பதன் மூலமோ அல்லது திட்டுவதன் மூலமோ அவர்களைத் தடுக்கவும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதோடு, இந்து பெண்களும், சிறுமிகளும் இஸ்லாமிய ஆண்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் என்றும், அந்த ஆண்களை வீடுகளுக்குள் வர அனுமதிக்கக் கூடாது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அவர் வன்முறையை தூண்டுவதாகவும், வெறுப்பை பரப்புவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேச்திர குப்தா, “மத்திய பிரதேசத்தில் வெறும் 7 பேர் தான் மத மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள போது, பாஜகவினர் ஏன் இவ்வளவு கூச்சல் போடுகிறார்கள்.?“ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர்கள் வெறுப்புணர்வை பரப்பி வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டி, கண்டனத்தை தெரிவித்துள்ளார்.





















