புதிய ராணுவ தளபதியாக நாளை பொறுப்பேற்கும் உபேந்திரா திவேதி.. யார் இவர்?
புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நாளை பொறுப்பேற்கிறார்.
இந்திய ராணுவத்தின் தற்போதைய தளபதியான, மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நாளை பொறுப்பேற்கிறார்.
புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்கும் உபேந்திர திவேதி:
ராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை, அடுத்த ராணுவத் தளபதியாக நியமித்து கடந்த 12ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனரல் மனோஜ் பாண்டே நாளையுடன் ஓய்வு பெறுகிறார். அதையடுத்து, நாளையே லெப்டினன்ட் ஜெனரல் திவிவேதி புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்கிறார்.
கடந்த 1964ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி, பிறந்த திவேதி, டிசம்பர் 1984 இல் ராணுவத்தின் காலாட்படையில் (ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்) இணைந்தார். இந்திய ராணுவத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். ரெஜிமென்ட் (18 ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்), பிரிகேட் (26 பிரிவு அசாம் ரைபிள்ஸ்), டிஐஜி, அசாம் ரைபிள்ஸ் (கிழக்கு) மற்றும் 9 கார்ப்ஸ் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன், டைரக்டர் ஜெனரல் காலாட்படை மற்றும் 2022-2024 வரையிலான Northern Command தலைமையகத்தின் தலைமைப் பொது அதிகாரி உள்ளிட்ட முக்கியமான பதவிகளை வகித்துள்ளார்.
உபேந்திர திவேதி கடந்து வந்த பாதை:
உபேந்திரா சைனிக் பள்ளி ரேவா, தேசிய பாதுகாப்புக் கல்லூரி மற்றும் அமெரிக்க ராணுவப் போர்க் கல்லூரி ஆகியவற்றில் படித்துள்ளார். DSSC வெலிங்டன் மற்றும் ராணுவப் போர் கல்லூரி, Mhow ஆகியவற்றிலும் படித்துள்ளார்.
யு.எஸ்.ஏ.டபிள்யூ.சி, கார்லிசில், யு.எஸ்., என்.டி.சி.க்கு இணையான படிப்பில், திவிவேதிக்கு 'டிஸ்டிங்விஷ்ட் ஃபெலோ' விருது வழங்கப்பட்டது. அவர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆய்வுகளில் எம்-பில் பட்டமும், வியூக ஆய்வுகள் மற்றும் ராணுவ அறிவியலில் இரண்டு முதுகலைப் பட்டங்களும் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம், அமைச்சரவையின் நியமனக் குழு, ஒரு அரிய நடவடிக்கையாக, ஓய்வுபெறும் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாத கால பணி நீட்டிப்பை வழங்கியது. இதற்கு மக்களவை தேர்தல் காரணமாக சொல்லப்பட்டது. ஜெனரல் பாண்டே மே 31 அன்று 62 வயதை அடையும் போது ஓய்வு பெறவிருந்தார். ஆனால், அவரது பதவிக்காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.