LPG Cylinder Price: 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்..வெளியான புதிய அறிவிப்பு...முதலமைச்சர் அதிரடி...!
வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் சேர்ந்திருப்பவர்களுக்கும் ₹ 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் அடுத்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எல்பிஜி சிலிண்டரை 500 ரூபாய்க்கு அளிக்க காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் சேர்ந்திருப்பவர்களுக்கும் ₹ 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அசோக் கெலாட், "அடுத்த மாதம் பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறேன். இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்கினார். ஆனால், சிலிண்டர் காலியாக உள்ளது.
ஏனெனில் (சிலிண்டர்) விலை இப்போது ₹ 400 முதல் ₹ 1,040 வரை உள்ளது. எனவே, உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் தலா 500 ரூபாய்க்கு வழங்குவோம் என்று கூற விரும்புகிறேன்" என்றார்.
தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே, ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைபயணம் ராஜஸ்தானில் நடந்து வருகிறது.
நடைபயணத்திற்கு மத்தியில் அல்வார் மாவட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 1,700 ஆங்கில வழிப் பள்ளிகளைத் திறக்கு மாநில அரசின் முடிவை பாராட்டி பேசினார்.
இதன் மூலம், அரசில் தனது இருப்பு நிலையாக உள்ளது என்பதை பைலட்டுக்கு கெலாட் உணர்த்தி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும், அடுத்த தேர்தலிலும் கெலாட் தலைமையிலேயே காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில், இலவசங்கள் பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது. இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக ஒரு சாரர் குற்றம்சாட்டி வருகிறது.
குறிப்பாக, இலவசங்களில் இருந்து நாட்டை விடுவிக்க மக்கள் முடிவு செய்துவிட்டதாக பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். ஆனால், பல்வேறு மாநிலங்களில் இலவச திட்டங்களை பா.ஜ.க.வே வழங்கி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதற்கு ஏற்றார் போல, உத்தரபிரதேசத்தில் சுவாமி விவேகானந்தர் யுவ சக்திகரன் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி டேப்லெட்டுகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.