அமளியில் ஈடுபட்ட மாணிக்கம் தாகூர், ஜோதிமணி... 4 பேரை சஸ்பெண்ட் செய்த மக்களவை சபாநாயகர்
அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம், ஜோதிமணி ஆகியோரை மக்களவை சபாநாயகர் இடைநீக்கம் செய்துள்ளார்.
விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்களவையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக 4 காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையிலிருந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று முடிவடையும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்த விரும்பினால், வீட்டுக்கு வெளியே பிளக்ஸ் பேனர்களை பிடித்துக்கொண்டு நடத்தி கொள்ளுங்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டிஎன் பிரதாபன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகரின் நடவடிக்கைக்குப் பிறகு, நான்கு பேரும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே சென்று முழக்கங்களை எழுப்பினர்.
சிலரை இடைநீக்கம் செய்வதன் மூலம் அரசு தங்களின் எம்பிக்களை மிரட்ட முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியள்ளது. "எங்கள் எம்பிக்கள் மக்களுக்கு முக்கியமான பிரச்னைகளை எழுப்ப முயற்சிக்கின்றனர்" என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காஸ் சிலிண்டர் விலை உயர்வு, மாவு, மோர் போன்ற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர். இப்பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி நாங்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் எந்த விவாதமும் நடைபெறவில்லை" என மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கூறியுள்ளார்.
பிற்பகல் 3 மணிக்குப் பிறகு விவாதத்திற்குத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவைக்குள் எந்த பதாகை போராட்டத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என எதிர்க்கட்சி எம்பிக்களை மக்களவை சபாநாயகர் எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக பேசிய அவர், "நீங்கள் பிளக்ஸ் பேனர்களை காட்ட விரும்பினால், அதை வீட்டிற்கு வெளியே செய்யுங்கள். நான் விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் எனது அன்புடன் நடந்து கொள்வதை பலவீனமாக நினைக்க வேண்டாம்" என சபாநாயகர் கூறினார்.
பிற்பகல் 3 மணிக்குப் பிறகு அமர்வு மீண்டும் தொடங்கியபோது, பூஜ்ஜிய நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்னதாக ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பதாகைகளுடன் நாடாளுமன்றத்திற்கு உள்ளே திரும்பிச் சென்றனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மீண்டும் அவைக்குள் பிளக்ஸ் பேனர்களை கொண்டு வந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை கடுமையாக விமர்சித்துள்ள திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, எம்பிக்களை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்