(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் - 2ம் கட்டமாக இன்று 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு - எந்த மாநிலங்களில் யார் போட்டி?
Lok Sabha Electon 2024 Phase 2 polling: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்டமாக, இன்று, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Lok Sabha Electon 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக உள்ளனர்.
மக்களவை தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. இந்நிலையில், இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
88 தொகுதிகளில் வாக்குப்பதிவு:
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி, அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதேநேரம் உள்ளூர் சூழலை சார்ந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் மாறுபடுகிறது.
மாநிலம் / யூனியன் பிரதேசம் | தொகுதிகள் |
அசாம் | 5 |
பீகார் | 5 |
சத்தீஸ்கர் | 3 |
ஜம்மு & காஷ்மீர் | 1 |
கர்நாடகா | 14 |
கேரளா | 20 |
மத்தியபிரதேசம் | 6 |
மகாராஷ்டிரா | 8 |
மணிப்பூர் | 1 |
ராஜஸ்தான் | 13 |
திரிபுரா | 1 |
உத்தரபிரதேசம் | 8 |
மேற்குவங்கம் | 3 |
தேர்தல் ஒத்திவைப்பு:
முன்னதாக இரண்டாம் கட்டத்தில் மொத்தமாக 89 தொகுதிகளில் வாக்குப்பத்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மத்திய பிரதேச மாநிலம் பேடுல் தொகுதியில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் திடீரென உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி அன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
சத்தீஸ்கர், அசாம், மணிப்பூர் மற்றும் ஜம்மு & காஷ்மிர் போன்ற பதற்றமான பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். மிகவும் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப்படையினர் உடன் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நட்சத்திர தொகுதிகள்:
முதற்கட்ட வாக்குப்பதிவில் 9 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் ஒரு முன்னாள் ஆளுநர் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கி கவனம் ஈர்த்தனர். அதேபோன்று, இரண்டாம் கட்ட தேர்தலிலும் பல நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
- மதுரா தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடும் நோக்கில், நடிகை ஹேமா மாலினி களமிறங்கியுள்ளார்.
- மீரட் தொகுதியில் ராமாயணம் இதிகாச தொடரில் நடித்து பிரபலமான அருண் கோவிலை பாஜக களமிறக்கியுள்ளது.
- பீகாரில் உள்ள புர்னியா தொகுதியில் பப்பு யாதவ் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்
- பாஜகவின் வயநாடு தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிபிஐ கட்சி சார்பில் ஆனி ராஜா மற்றும் கேரளா மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் வேட்பாளர்களாக களம் காண்கிறது. கடந்த தேர்தலிலும் ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- வயநாடை போன்று திருவனந்தபுரத்திலும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தற்போதைய எம்.பி., ஆன காங்கிரஸின் சசி தரூர், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் பன்னயன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.