தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது ஏற்பட்ட சோகம்.. பஸ் மீது டிரக் மோதி விபத்து.. 21 காவல்துறை அதிகாரிகள் காயம்!
மத்தியப் பிரதேச மாநில சிந்த்வாரா மாவட்டத்தில் தேர்தல் பணியில் இருந்து திரும்பிய பேருந்தின் மீது டிரக் மோதியத்தில் 21 காவல்துறை அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநில சிந்த்வாரா மாவட்டத்தில் தேர்தல் பணியில் இருந்து திரும்பிய பேருந்தின் மீது டிரக் மோதியத்தில் ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பிரதேச காவல்துறை பணியாளர்கள் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.
என்ன நடந்தது..?
2024 மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற சிந்த்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் தேர்தல் பணி முடிந்து பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த டிரக், பேருந்தில் மோதியதில் பெதுலில் உள்ள பரேதா காட் அருகே தேசிய நெடுஞ்சாலை 47 இல் ஒரு பள்ளத்தில் விழுந்தது. இதில், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பிரதேச காவல்துறை பணியாளர்கள் உள்பட 21 பேர் காயம் அடைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ”விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் பெதுல் மற்றும் ஷாபூரிலிருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் பெதுல் மற்றும் ஷாபூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விபத்து குறித்து பேசிய அவர், “ கடுமையான காயங்களுக்கு உள்ளான 8 காவல்துறை அதிகாரிகள் பெதுலில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்துல் 13 வீரர்கள் ஷாபூர் அரசு மடுத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.
எத்தனை பேர் பயணம்..?
இந்த பேருந்தில் மொத்தமாக 44 பாதுகாப்புப் பணியாளர்கள் பயணித்துள்ளனர். இதில், 5 பேர் மட்டுமே மத்திய பிரதேச மாநில காவல்துறையை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் ஊர்க்காவல் படையினர் என்று தெரிகிறது.
விபத்துக்கான காரணம் என்ன..?
பேருந்து, முன்னால் சென்ற டிரக்கை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு டிரக் மீது மோதியுள்ளது. இந்த மோதலின் தாக்கத்தால் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் வாகனத்தில் இருந்த 21 பாதுகாப்பு பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தல்:
நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (நேற்று) நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 6 தொகுதிகளும் அடங்கும். ஏழு கட்ட மக்களவைத் தேர்தல் 2024 ஜூன் 1 வரை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு நடைபெறும். வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த முடிவுகளுக்கு பிறகு, அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவில் யார் நம்மை ஆள போகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தெரியும்.