வழக்கு தொடர்வேன்...ராகுல் காந்திக்கு எதிராக சவால்விட்ட லலித் மோடி...இதான் காரணமா?
அவதூறு விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கூறியிருந்தார்.
இதையடுத்து, மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ராகுல் காந்திக்கு எதிராக சவால்விட்ட லலித் மோடி:
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளார் லலித் மோடி. ஐபிஎல்-இல் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக லலித் மோடி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து அவர் லண்டனுக்கு தப்பி சென்றார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் லண்டனில் இருந்து வருகிறார்.
இச்சூழலில், அவதூறு விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி கூறியுள்ளார்.
காரணம் இதுதான்:
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "அவர் (ராகுல் காந்தி) தன்னை தானே முட்டாள் ஆக்கி கொள்வதை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன். நீதியை கண்டு தப்பி ஓடுவதாக ராகுல் காந்தி ஆதரவாளர்கள் என்னை மீண்டும் மீண்டும் விமர்சித்து வருகிறார்கள். எந்த குற்ற வழக்கிலும் நான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும், எதற்காக, ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள்?
100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையாக வருவாயை ஈட்டி தரும் உலகின் மிக பெரிய விளையாட்டு தொடரை உருவாக்கியவன் நான். காந்தி குடும்பத்தை விட என் குடும்பம் இந்தியாவுக்காக அதிகம் செய்துள்ளது. முடிந்தால் குற்றச்சாட்டு நிரூபியுங்கள். நீதிமன்றத்தில் அவர் (ராகுல் காந்தி) தன்னை தானே முட்டாள் ஆக்கி கொள்வதை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் பலர் வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருக்கின்றனர். அவர்களின் சொத்துக்களின் முகவரி மற்றும் புகைப்படங்களை என்னால் பகிர முடியும். நாடு கடுமையான அவதூறு சட்டங்களை இயற்றியவுடன் தான் இந்தியா திரும்புவேன்" என பதிவிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகங்களில் ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக ஜெர்மனி கருத்து தெரிவித்தது.
செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "இந்திய எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக வந்துள்ள நீதிமன்ற தீர்ப்பு, நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அறிவோம். எங்களுக்கு தெரிந்தவரை, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார்.
இந்த தீர்ப்பு நிலைத்திருக்குமா என்பதும், தகுதி நீக்கம் செய்வதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா என்பதும் பிறகுதான் தெளிவாக தெரியவரும். நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளின் தரநிலைகள் இந்த வழக்கில் பொருந்தும் என்று ஜெர்மனி எதிர்பார்க்கிறது" என்றார்.