முடிவுக்கு வரும் சகாப்தம்.! 150 வருட பாரம்பரிய டிராம் வண்டி சேவையை நிறுத்தும் மேற்குவங்க அரசு.! எதனால்.?
Kolkata’s Trams: 150 ஆண்டுகள் பழமையான டிராம்ஸ் வண்டி சேவையை நிறுத்துவதாக மேற்கு வங்க அரசாங்கம் அறிவித்துள்ளது
கொல்கத்தாவின் வரலாற்று சிறப்புமிக்க டிராம் வண்டி சேவையை நிறுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இது நகரத்தின் பாரம்பரியத்தின் அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
டிராம் சேவை நிறுத்தம்:
கொல்கத்தாவின் புகழ்பெற்ற டிராம் சேவையை நிறுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இது 1873 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வண்டி சேவையானது மேற்கு வங்க நகரத்தின் பாரம்பரியம் மற்றும் தனித்துவமான அடையாளமாக இருந்தது என்றே சொல்லலாம்.
150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவையானது, ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. டிராம்கள் பாட்னா, சென்னை, நாசிக் மற்றும் மும்பை போன்ற நகரங்களால் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இறுதியில் எல்லா இடங்களிலும் படிப்படியாக அகற்றப்பட்டன. ஆனால் மேற்கு வங்கத்தில் மட்டும் செயல்பட்டு வந்த டிராம்கள், இதுவும் தற்போது நிறுத்தப்படவுள்ளதாக மேற்கு வங்க அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டிராம் பாரம்பரியம்:
கொல்கத்தாவின் டிராம் பயணமானது, பிப்ரவரி 24, 1873 இல் தொடங்கியது. முதன்முதலில் குதிரைகள் மூலமாக இழுத்துச் செல்லப்பட்டது என கூறப்படுகிறது. இதையடுத்து 1882 ஆம் ஆண்டில், நீராவி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, இது நவீனமயமாக்கலுக்கு வழி வகுத்தது.பின்னர், 1900 ஆம் ஆண்டு மின்சாரத்தில் இயங்கும் டிராம் அறிமுகமானதை தொடர்ந்து, நகரத்தில் பொது போக்குவரத்தை மாற்றியது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மின்மயமாக்கலுக்குப் பிறகு, 2013 இல் ஏசி டிராம்கள் அறிமுகப்படுத்தப்பட்டது, கொல்கத்தாவின் டிராம் சேவையின் பரிணாம வளர்ச்சியில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதாக பார்க்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல்:
இதுகுறித்து மேற்குவங்க போக்குவரத்து துறை அமைச்சர் சக்கரவர்த்தி தெரிவித்ததாவது “ டிராம்கள் மெதுவான போக்குவரத்து முறை என்றும், பயணிகளுக்கு வேகமாக செல்லக்கூடிய போக்குவரத்து முறை தேவை என்றும் கூறினார். போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக டிராம் சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
டிராம்கள், கொல்கத்தாவின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. டிராம்களை சாலைகளில் இயக்கப்படுவதால் , போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை நாங்கள் கவனித்தோம், என்று அமைச்சர் சக்கரவர்த்தி கூறினார்.
மேலும், எஸ்பிளானைடு டூ மெய்டன் பகுதிக்கு இடையில் மட்டும் செயல்படும் என்றும், இதர அனைத்து பகுதிகளிலும் சேவையானது நிறுத்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
”சேவை நிறுத்தப்படக்கூடாது”:
இந்த நடவடிக்கை குறித்து தனது உள்ளூர் பயணி சிலர் தெரிவிக்கையில், "இதை நிறுத்தக்கூடாது. கொல்கத்தா மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு இது ஒரு உயிர்நாடி. இப்போது விலைவாசி அதிகரித்துள்ளது. பஸ் மற்றும் டாக்ஸியில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளின் விலை அதிகம்.ஆகையால், இது நிறுத்தப்படக்கூடாது என தெரிவித்தார்.
"நகரங்கள் உருவாக வேண்டும்,மேம்படுத்தப்பட வேண்டும், ஆனால் அதனுடன், வரலாறும் பாதுகாக்கப்பட வேண்டும்", டிராம்கள் "நகரத்தின் பழைய அடையாளம்" என்றும் பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.