விலகிய லிங்காயத் தலைவர்கள்.. பாஜகவின் அஸ்திரத்தை கையில் எடுத்த காங்கிரஸ்.. விறுவிறுக்கும் கர்நாடக தேர்தல்!
கர்நாடகாவில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா சமூகத்தினர் தான் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றனர்.
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிருப்தி காரணமாக முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இருந்து தொடர்ந்து விலகி வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் எந்த கட்சியும் தனி மெஜாரிட்டி பெறாத நிலையில் காங்கிரஸ் தயவுடன் ஆட்சியமைத்தார் ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி. ஆனால், காங்கிரஸ், ஜனதா தளம் இடையே வெடித்த மோதலால் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலில் ஆட்சியமைத்த நிலையில், அவருக்கு பதில் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக்கப்பட்டார். கடந்த தேர்தலைப் போல யாரையும் நம்பியிருக்காமல் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்று வியூகம் வகுத்திருந்த பாஜகவிற்கு, கார்நாடக பாஜகவில் தற்போது அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் எல்லாம் அதிர்ச்சியை கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகமாக லிங்காயத்துகள் பார்க்கப்படுகிறார்கள். இந்த மக்களின் வாக்குகளை பெறும் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், லிங்காயத்துகளின் வாக்குகளைக் கவர காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே அவர்களுக்கு சலுகைகளை வாரிவழங்கும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் லிங்காயத்துகளின் ஆதரவு காங்கிரஸுக்கு தான் பிரகாசமாக இருப்பதாகத் தெரிகிறது. எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது துணை முதலமைச்சராக இருந்த லக்ஷ்மன் சாவடி அதிருப்தி காரணமாக பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரும், பாஜகவின் வருங்கால முகம் என்று அறியப்பட்டவருமான லக்ஷ்மண் சாவடி காங்கிரஸில் இணைந்தது பாஜகவினரை அதிர்ச்சியடையவைத்தது. லக்ஷ்மண் சாவடி மட்டுமில்லை, பாஜக முன்னாள் எம் எல் ஏக்கள் மற்றும் சிட்டிங் எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கூடாரத்திற்கு படையெடுப்பது பாஜகவினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
பாஜக முன்னாள் எம்எல்ஏக்களான நஞ்சுண்டசாமி, மனோகர் அய்னாபூர் மற்றும் மைசூர் முன்னாள் மேயர் புருஷோத்தம், சிட்டிங் எம்எல்ஏவான NY கோபாலகிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே காங்கிரஸில் இணைந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டரும் தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் 52 புதுமுகங்களுக்கும் 90 சிட்டிங் எம்எல்எஏக்களுக்கும் வாய்ப்பளித்திருக்கிறது பாஜக தலைமை. இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத பாஜக முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து அதிருப்தியில் வெளியேறி வருகின்றனர். வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸில் இணைந்திருக்கிறார் முன்னாள் முதலமைசர் ஜெகதீஷ் ஷெட்டர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பல ஆண்டுகால உறுப்பினரும் லிங்காயத்து சமூகத்தின் முக்கிய தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா சமூக்த்தினர் தான் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் சுமார் 100 தொகுதிகளில் பெரும்பான்மை சமூகத்தவர்களாக லிங்காயத்து சமூகத்தினராக இருக்கின்றனர். குறிப்பாக வடக்கு கர்நாடகா பகுதியில் இவர்கள் அதிகம். கர்நாடக மக்கள் தொகையில் ஒக்கலிகா சமூகம் 15% பேர் என்றால், 17% பேர் லிங்காயத்துகள் என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களில் 54 பேர் லிங்காயத்துகள், அதில் 37 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்.
லிங்காயத்துகளை பகைத்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பது இரண்டு தேசிய கட்சிகளுக்குமே தெரியும். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கர்நாடக முதலமைச்சராக இருந்த வீரேந்திர பாட்டிலை பதவி நீக்கம் செய்தார். லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவரான விரேந்திர பாட்டிலை நீக்கியது லிங்காயத்துகளிடையே கடும் அதிருப்தியை கொடுத்தது. அதுவரை காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்த அவர்கள் பாஜக பக்கம் தாவினார்கள். இந்த அதிருப்தி அடுத்தடுத்த தேர்தல்களில் கடுமையாக எதிரொலித்தது. 1989ல் 224 தொகுதிகளில் 179ல் வெற்றிபெற்றிருந்த நிலையில், அடுத்த தேர்தலில் 36 இடங்களில் மட்டும் வெற்றிபெறும் நிலமைக்குத் தள்ளப்பட்டது காங்கிரஸ். இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், லிங்காயத்துகளை பகைத்துக்கொண்டதும் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது.
லிங்காயத்துகளின் பலம் பாஜகவிற்கும் தெரியும். 2008ல் பாஜக கர்நாடகாவில் முதல்முறையாக ஆட்சியமைத்ததே லிங்காயத்துகளின் தயவால் தான். 110 இடங்களில் வெற்றிபெற்று முதலமைச்சரானார் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா. ஆனால் அடுத்தத் தேர்தலில் பாஜகவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா பக்ஷா என்ற கட்சியை 2012ல் தொடங்க, வெறும் 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது பாஜக.
அதனால் இரண்டு கட்சிகளுமே லிங்காயத்துகளை பகைத்துக்கொள்ள விரும்பாது. வடக்கு கர்நாடகா என்பது 13 மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த வடக்கு கர்நாடகா பகுதையைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மண் சாவடி ஆகியோர் காங்கிரஸில் இணைந்திருக்கின்றனர். தற்போதைய முதலமைச்சரான பசவராஜ் பொம்மை மீது 40% கமிஷன் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது காங்கிரஸ். பொம்மை லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மீது கடும் அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன விஜயேந்திராவுக்கு சீட் கொடுத்து எடியூரப்பா தரப்பு அதிருப்தியை சரிகட்டியிருக்கிறது பாஜக.
எனினும், வழக்கமாக காங்கிரஸில் இருந்து தலைவர்களை உருவும் பாஜக பாணியை, இந்த தேர்தலில் கையில் எடுத்திருக்கிறது காங்கிரஸ். இதை எப்படி பாஜக எதிர்கொள்ளப்போகிறது, கட்சித் தாவல்கள் காங்கிரஸுக்கு கைகொடுத்ததா என்பது மே 13ம் தேதி தெரிந்துவிடும்.