கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? பரபரப்பான எதிர்பார்ப்பு!
கேரள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கேரள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படும் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பாஜக கூட்டணி இடையே கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 12,000 வார்டுகளில் 38,994 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த முடிவுகள் கேரள அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் செயல்படும் இந்த கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதே சமயம், கேரளாவில் தனது செல்வாக்கை அதிகரிக்க பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த முக்கிய கட்சிகளுடன் சில சிறிய கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டன.
கடந்த டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்டமாக, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் டிசம்பர் 9 அன்று தேர்தல் நடந்தது. இதில் 70.91% வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து, டிசம்பர் 11 அன்று திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, வயநாடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 76.08% வாக்குகள் பதிவாகின.
கேரள மாநிலம் முழுவதும் மொத்தம் 941 கிராம பஞ்சாயத்துகள், 152 பிளாக் பஞ்சாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள் மற்றும் 6 மாநகராட்சிகள் உள்ளன. குறிப்பாக, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், திரிச்சூர், கண்ணூர் ஆகிய மாநகராட்சிகளைக் கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் டிசம்பர் 21 ஆம் தேதி பதவியேற்க உள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 244 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.





















