சவுதி டூ எர்ணாகுளம்! காதலியை மீட்ட இளம்பெண்ணின் சட்டப்போராட்டம்! கேரளாவை பரபரப்பாக்கிய லெஸ்பியன் காதல்!
சவுதி அரேபியாவில் இருந்து வலுக்கட்டயமாக பிரித்து அழைத்துச்செல்லப்பட்ட தனது காதலியை நீதிமன்றம் வரை சென்று இளம்பெண் போராடி மீட்டுள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![சவுதி டூ எர்ணாகுளம்! காதலியை மீட்ட இளம்பெண்ணின் சட்டப்போராட்டம்! கேரளாவை பரபரப்பாக்கிய லெஸ்பியன் காதல்! Kerala Lesbian Couple Reunited by High Court in Big Win After Being Separated by Parents சவுதி டூ எர்ணாகுளம்! காதலியை மீட்ட இளம்பெண்ணின் சட்டப்போராட்டம்! கேரளாவை பரபரப்பாக்கிய லெஸ்பியன் காதல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/01/f183e29113f5af138b752a2ef41127db_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரளாவில் தனது காதலியை மீட்டு தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில் கேரள நீதிமன்றம் இருவரும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியதுடன், அவர்களை உறவினர்கள் யாரும் இடையூறு செய்யக்கூடாது என்று தீர்ப்பு அளித்துள்ளது.
லெஸ்பியன் காதல்
முன்னதாக, கேரளாவில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ளது ஆலுவா. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவரது பெற்றோர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்ததால் இவர்களது குடும்பம் சவுதிக்கு குடிபெயர்ந்துள்ளது. இதனால், நஸ்ரினும் சவுதியில் படித்துள்ளார். நஸ்ரின் சவுதியில் படித்தபோது அவருக்கு பாத்திமா நூரா என்ற தோழி அறிமுகமாகியுள்ளார்.
நூராவின் பெற்றோர்களும் கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் நஸ்ரினும், நூராவும் எளிதில் நெருங்கிய தோழிகள் ஆகியுள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் மிகவும் நெருக்கமாக மாறி காதலாக உருவெடுத்துள்ளது. நஸ்ரினும், பாத்திமா நூராவும் மிகவும் நெருக்கமாக இருப்பதை அறிந்த இருவரது பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காதலிகள் பிரிப்பு
இதனால்,, பாத்திமா நூராவின் பெற்றோர்கள் பாத்திமாவை உடனடியாக கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். தனது காதலி தன்னைவிட்டு கேரளாவிற்கு சென்றதை அறிந்த நஸ்ரின் மிகவும் மனம் உடைந்துள்ளார். இதனால், ஆதிலா நஸ்ரின் தனது காதலியைத் தேடி சவுதி அரேபியாவில் இருந்து கேரளாவிற்கு உடனடியாக விமானம் மூலம் பறந்து வந்துள்ளார். பாத்திமா நூராவை கண்டுபிடித்த நஸ்ரின், அவருடன் கடந்த 19-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இருவரும் தனியாக வீடு எடுத்து ஒன்றாக இருந்து வந்துள்ளனர். பாத்திமா நூராவை கண்டுபிடித்த அவரது உறவினர்கள் நஸ்ரினிடம் இருந்து அவரை பிரித்து அழைத்துச் சென்றனர். இதனால், மனமுடைந்த நஸ்ரின் பாத்திமா நூராவை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச்சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததுடன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
சட்டத்தால் கிடைத்த வெற்றி
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்த ஆதிரா நஸ்ரின், பெற்றோர்களும் உறவினர்களும் எங்களை கேலி செய்கின்றனர். கேவலமாக நடத்துகின்றனர். ஓரினச்சேர்க்கை என்பது ஒரு மனநல கோளாறு போல பார்க்கின்றனர். இங்குள்ள பெரும்பான்மையான மக்களால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை.
பாத்திமா நூராவை அவரது உறவினர்கள் என்னிடம் இருந்து கடத்திச்சென்றதும் நான் உடைந்து போனேன். அவரது பெற்றோர்கள் அவரை மாற்ற முயற்சித்தனர். ஆனால், பாத்திமா உறுதியாக இருந்தார். நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினாலும், இந்த சமூகமும், பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ளுமா? என்ற மன உளைச்சலில் இருந்து வெளியே வந்துள்ளோம். இனி நிம்மதியாக வாழ்க்கையை தொடர்வோம்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)