Kerala: விமான விபத்தில் இறந்த மகன்: 45 ஆண்டுகளுக்குப் பின் தாயிடம் வந்த ஆச்சர்யம்!
கேரளாவில் அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே இருந்த 45 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்படும் சஜ்ஜத் தங்கல் தன்னுடைய 70 வயதில் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.
சினிமாவில் தான் பார்த்திருப்போம் விமான விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட நிலையில் மீண்டும் அவர் உயிரோடு திரும்பி வரும் நிகழ்வுகளை எல்லாம். குறிப்பாக இதுப்போன்றப் படங்களைப்பார்க்கும் பொழுது எல்லாம் நம்மை அறியாமலேயே கண்கள் கலங்கும். இதுப்போன்ற ஒரு உண்மை நிகழ்வு ஒன்று தான் கேரள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கொல்லம் பகுதியைச்சேர்ந்த சஜ்ஜத் தங்கல் என்பவர் தன்னுடைய 25 வயதில் வளைகுடா நாடுகளுக்குச் சென்று கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வருவாராம். அப்படித்தான் 1976 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மும்பை திரும்புவதற்கு சஜ்ஜல் தங்கல் திட்டமிட்டு அதற்கான விமானடிக்கெட்டினையும் எடுத்துள்ளார். மேலும் தான் இந்த விமானத்தில் தான் வருகிறார் என்று வீட்டிற்கும் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அங்கு விழா நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மாறுதல்களால் பயணம் ரத்தாகி, அவர் செல்லவிருந்த விமானத்தில் செல்லவில்லை.
இந்நிலையில் தான், தன் மகன் வருவான் என்று எதிர்ப்பார்த்திருந்த பெற்றோர்களுக்கு, பேரதிர்ச்சி தான் வந்தது. அபுதாபில் இருந்து சஜ்ஜத் தங்கல் வருவதாக திட்டமிடப்பட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 95 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் இந்த விபத்தில் சஜ்ஜத் தங்கலின் நண்பர்கள் மற்றும் அவருடன் தொழிலில் ஈடுபட்ட நண்பர்களும் இவ்விபத்தில் பலியாகினர். இதனால் சஜ்ஜத்தும் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் கருதிவிட்டனர். பின்னர் மும்பை திரும்பிய அவர் சிறிது காலம் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் சிகிச்சை பெற்றுவந்தார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக பல ஆண்டுகளுக்குப்பின் சஜ்ஜத்துக்கு பழைய நினைவுகள் திரும்பியது. இதனையடுத்து அவரிடம் தொண்டு நிறுவனத்தினர் நீங்கள் யார்? எப்படி இங்கே வந்தீர்கள்? உறவினர்கள் எல்லாம் எங்கு உள்ளார்கள்? என விசாரித்தனர். இதனையடுத்து கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள சஜ்ஜத்தின் 91 வயது தாயுடன் பேசுவதற்கு மும்பையிலுள்ள தொண்டு நிறுவன அமைப்பினர் ஏற்பாடு செய்தனர்.
இதனையடுத்து சந்தோஷ அலையில் சஜ்ஜத் மற்றும் அவரது தாய் மனம் துள்ளிக்குதித்தது. தன் மகன் இறந்துவிட்டார் என்று நினைத்திருப்பொழுது, மீண்டும் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி பிரசவத்தின் போது ஏற்பட்ட சந்தோஷத்தினை விட அளப்பெரிதாகவே இருந்தது. பின்னர் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு கடந்த சனிக்கிழமையன்று சஜ்ஜத் தங்கல் கேரள மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான சதம் கோட்டாவுக்கு சென்றனர். 45 ஆண்டுகளுக்கு பிறகு தாயினைப்பார்த்த மகனின் கண்கள் கண்ணீரில் தத்தளித்தன. பின்னர் தாய் பாத்திமா பீவி மற்றும் சஜ்ஜத்தும் ஆர கட்டித்தழுவிக்கொண்டனர். இவர்கள் இவரின் இந்த பாசத்தினைக்கண்ட ஊர்மக்களும் கண் கலங்கினர். 25 வயதில் குடும்பத்தினைப் பிரிந்த நிலையில் தன்னுடைய 70 வயதில் மீண்டும் உறவுகளுடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சஜ்ஜத் தெரிவிக்கிறார். இதோடு எனது தாயரையும் வாழ்வில் மீண்டும் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை என்று கண்ணீருடன் கருத்தினை பகிர்ந்தார்.