`ஆன்லைன் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும்!’ - காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கோரிக்கை!
சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஆன்லைன் கல்வி வழங்கும் நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கடந்த டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஆன்லைன் கல்வி வழங்கும் நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், அவர் இந்த நிறுவனங்கள் வளர்ந்து வரும் மாணவர்களிடம் இருந்து தானாகவே பணம் பறிப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளதோடு, ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் கல்வியின் தரம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தகைய நிறுவனங்கள் தரும் ஆன்லைன் கல்விப் பாடத்திட்டங்கள் முறையாகப் பரிசோதிக்கப்படுவது இல்லை எனவும் காங்கிரஸ் எம்.பியான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
`பாடத் திட்டங்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். சில தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள் பாடம் கற்றுத் தர வேண்டும். அத்தகைய ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி அல்லது அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட தொகை ஊதியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் இன்று பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளைக் கொண்டிருக்கும் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் யாரும் பரிசோதனை செய்யாத கல்விப் பாடங்களை ஆன்லைனில் கற்றுக் கொடுக்கிறார்கள். சில ஆன்லைன் நிறுவனங்களின் சொத்து மதிப்பு இந்தியாவின் ஒட்டுமொத்த கல்விக்கான பட்ஜெட்டை விட அதிகம். இத்தகைய ஆன்லைன் நிறுவனங்கள் தற்போது தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி தர விரும்பும் ஏழை பெற்றோரைக் குறிவைத்து வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே ஒவ்வொரு மாதமும் பணம் பிடித்துக் கொள்கின்றன இந்த நிறுவனங்கள்’ என்று ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தன் உரையில் கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பியான கார்த்தி சிதம்பரம்.
இத்தகைய நிறுவனங்களை `கடன் முதலைகள்’ என்று சுட்டிக் காட்டியுள்ள கார்த்தி சிதம்பரம், இந்தியாவின் அப்பாவி மக்கள் மீது இத்தகைய ஆன்லைன் கல்விப் பாடங்களை இந்நிறுவனங்கள் திணிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரங்களைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டும் போது, தங்கள் பலத்தைப் பயன்படுத்தி அத்தகைய புகார்களை வெளிவராமல் செய்வதிலும் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதையும் கார்த்தி சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார்.
As a follow up to my zero hour intervention in parliament about the need to regulate EduTech cos, I have now written to the Education Minister @dpradhanbjp pic.twitter.com/i3CBiVU0Rd
— Karti P Chidambaram (@KartiPC) December 14, 2021
நாடாளுமன்றத்தில் பேசிய மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல்வேறு விவரங்களையும் சேர்த்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்.