மீண்டும் மிரட்ட வரும் கொரோனா.. கர்நாடகாவில் அதிரடி கட்டுப்பாடுகள்
கேரளாவில் கொரேனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, கர்நாடகாவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இச்சூழலில், கடந்த சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால், அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, கேரளாவில் JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவை மிரட்டும் கொரோனா:
கேரளாவில் தற்போது 1,324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 700 முதல் 1,000 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை விகிதம் கேரளாவில்தான் அதிகம் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேவையின்றி யாரும் பீதி அடைய வேண்டாம் என கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இது தொடர்பாக சுகாதாரத் துறையும் உரிய ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கேரளாவில் கொரேனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, கர்நாடகாவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கர்நாடாகாவில் அதிரடி கட்டுப்பாடுகள்:
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், "இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள், கொரோ பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களிடையே சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. எல்லை மாவட்டங்களில் அதிக கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நடமாடவும் ஒன்றுகூடுவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதுகுறித்து அரசாங்கம், விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும்.
யாரும் பீதி அடைய தேவையில்லை. நாங்கள் நேற்று முன் தினம் ஒரு கூட்டத்தை நடத்தியிருந்தோம். டாக்டர் (கே) ரவி தலைமையிலான எங்கள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நேற்று கூடி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எங்கள் அதிகாரிகளுக்கும் நிபுணர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.
தொற்றுநோய்கள் அதிகரித்து வருகிறதா, இல்லையா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். கொரோனா சோதனைகளை அதிகப்படுத்தும்போது, கொரோனா பாதிப்பு அதிகம் பதிவானால் எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம். இப்போது எந்த தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதயம், சிறுநீரகம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் மற்றும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்" என்றார்.