Karnataka: பாக்கு மரத்தில் பலே விளைச்சல்... கிடைத்த பணத்தில் பஸ் வாங்கி அசத்திய அரசு பள்ளி..!
கர்நாடக அரசுப் பள்ளி ஒன்று தனது நிலத்தில் விளைந்த பாக்கு விதைகளை விற்பனை செய்து கிடைத்த வருமானத்தில் பேருந்து ஒன்றை வாங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளி ஒன்று தனது நிலத்தில் விளைந்த பாக்கு விதைகளை விற்பனை செய்து கிடைத்த வருமானத்தில் பேருந்து ஒன்றை வாங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் பாக்கு மரம்:
112 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இந்த அரசு பள்ளியில் 4.15 ஏக்கர் நிலம் உள்ள நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு பள்ளி வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு, ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து இந்த நிலத்தில் 628 பாக்கு மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த பாக்கு மரத்திலிருந்து கடந்த ஆண்டு முதல் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இந்த பாக்குகளை அருகிலிருந்த கிராமத்தில் பள்ளி நிர்வாகம் விற்று வந்துள்ளது. விற்பனையின் அடிப்படையில் பள்ளிக்கு ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ சரோஜா ஒரு திட்டம் ஒன்றை தீட்டிள்ளார். அதன் படி, பள்ளிக்கு தினமும் பல கிலோ மீட்டர்கள் தூரம் நடந்துவரும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் விதமாக பேருந்து வாங்க திட்டமிட்டு, அதை சக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
நல்ல திட்டத்தை அங்கிருந்த பிற ஆசிரியர்களுக்கு ஏற்றுக்கொள்ள, ரூபாய் 5 லட்சம் ரூபாய் செலவில், 26 இருக்கைகள் கொண்ட பஸ்சை வாங்கியுள்ளனர். பேருந்தின் பராமரிப்புப் பணியை, பாக்குப்பண்ணையின் வருமானத்தில் இருந்து செலவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். புத்தூர் எம்எல்ஏ சஞ்சீவ் மடந்தூர் கடந்த செப்டம்பர் 10 சனிக்கிழமை பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதுகுறித்து எம்எல்ஏ சஞ்சீவ் மடந்தூர் பேசுகையில், “இப்பள்ளியில் 118 குழந்தைகள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள். பள்ளி பேருந்து அவர்களின் போக்குவரத்தை எளிதாக்கும். பாக்கு மரம் நட்ட கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் எஸ்டிஎம்சியின் முயற்சிகளை பாராட்டுகிறேன். பள்ளிக்கு கூடுதல் அறை கட்ட அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, விரைவில் பள்ளிக்கு கான்கிரீட் சாலை அமைக்கப்படும்” என தெரிவித்தார்.