Gobi Manchurian Ban: மக்களே! இனி கோபி மஞ்சூரியனுக்கு தடை! எதனால் தெரியுமா?
Gobi Manchurian Ban: கர்நாடகாவில் நிறமூட்டப்பட்ட கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட உணவுகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நிறமூட்டப்பட்ட கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறுவோர் மீது 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டது.
விற்பனைக்கு தடை:
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நிறமூட்டப்பட்ட ( ரசாயனம் சேர்க்கப்பட்ட ) பஞ்சுமிட்டாய், உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், புற்றுநோயை ஏற்படுத்தும் காரணி இருப்பதாகவும் கூறி தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நிறமூட்டப்பட்ட கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் உள்ளிட்ட உணவுகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டன. இந்த உணவுகளில் புற்றுநோயை உண்டாக்க காரணமாக இருக்கும் ரசாயனங்கள் இருப்பதாக கண்டறிந்ததையடுத்து தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
மாதிரிகள் சோதனை:
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை தெரிவிக்கையில், கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. கோபி மஞ்சூரியன் 171 மாதிரிகளை சோதனை செய்ததில் 107 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களான டார்ட்ராசின், சன்செட் எல்லோ, கார்மோசின் நிறமி ஆகியகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
25 பஞ்சு மிட்டாய் மாதிரிகளை சோதனை செய்ததில் 15 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களான டார்ட்ராசின் மற்றும் ரோடமைன் -பி உள்ளிட்டவை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ரூ. 10 லட்சம் அபராதம்:
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவிக்கையில், இந்த உத்தரவை மீறும் உணவகங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களின் உரிமமும் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த தடை குறித்து மேலும் தெரிவிக்கையில், கோபி விற்பனைக்கு தடை விதிக்கவில்லை. புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளாக கருதப்படும் செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட கோபி மஞ்சுரியனுக்கே தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார். ( கோபி என்பது காலிபிளவர் காய்கறி என்பது குறிப்பிடத்தக்கது ). மேலும் நிறமியற்ற வெள்ளை பஞ்சுமிட்டாய்க்கும் தடை இல்லை என்றும் தெரிவித்தார். ( வெள்ளை பஞ்சுமிட்டாய் என்பது நிறமியற்ற, புற்றுநோயை உண்டாக்கும் ராசாயனமற்றதாகும் )
இதையடுத்து, தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை தொடரும் எனவும், இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
Also Read: புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை - புதுச்சேரியில் பெற்றோர்கள் அச்சம்