Karnataka Election: உச்சக்கட்ட சஸ்பென்ஸ்.. டெல்லிக்கு பறக்கும் "இரட்டை தல"..! முதலமைச்சர் பதவிக்காக போட்டா போட்டி..!
சித்தராமையாவை தொடர்ந்து, சிவக்குமாரும் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களை கைப்பற்றி ஆட்சியை இழந்துள்ளது.
உச்சக்கட்ட சஸ்பென்ஸ்:
ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்காற்றும் என கருதப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வெறும் 19 இடங்களை கைப்பற்ற, சுயேச்சை உள்ளிட்ட பிறர் 4 இடங்களை கைப்பற்றினார். இதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே, முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது.
நேற்று நடைபெற்ற, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு கூட்டத்தில், சட்டப்பேரவை குழு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக யார் தேர்வு செய்யப்படுகிறாரோ, அவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும்.
புதிய ட்விஸ்ட்-க்கு தயாராகும் காங்கிரஸ்:
இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சித்தராமையா டெல்லிக்கு சென்றுள்ளனர். கர்நாடகாவில் 2வது முறையாக முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சித்தராமையாவை தொடர்ந்து, சிவக்குமாரும் இன்று இரவு டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். டெல்லிக்கு செல்வதற்கு முன்பு, கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவக்குமார், "இன்று என் பிறந்தநாள். நான் என் குடும்பத்தை சந்திக்க உள்ளேன். அதன்பிறகு, நான் டெல்லி செல்கிறேன். எனது தலைமையில், 135 எம்.எல்.ஏ.க்கள் பெற்றுள்ளோம். அனைவரும் ஒரே குரலில் (முதலமைச்சரை நியமிக்கும்) விஷயத்தை கட்சி மேலிடத்திற்கு விட வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸை வெற்றி பெற வைப்பது எனது நோக்கம். நான் அதை செய்து காண்பித்துள்ளேன்.
நான் ஒரு தனி மனிதன். தைரியம் உள்ள தனி மனிதன் பெரும்பான்மை பெறுவோம் என்று ஒரு விஷயத்தை நம்பினேன். எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறியபோதும், நான் மனம் தளரவில்லை" என்றார்.
திட்டம் இதுதான்:
முதலமைச்சர் பதவி இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலை முன்னிட்டு, தென்னிந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்படும் என்றும் தேர்தலுக்கு பின்னர், முதலமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது,.
வரும் வியாழக்கிழமை, முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதில், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.