Bangalore 144 Act: பெங்களூருவில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு.. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
பெங்களூருவில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணியையொட்டி, 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
பெங்களூருவில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணியையொட்டி, 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு:
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கிலும் காலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ பெங்களூருவில் 5 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன். இதில் 32 தொகுதிகளில் பதிவான வாக்குக்ள் எண்ணப்பட உள்ளன. இதையடுத்து குறிப்பிட்ட 5 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் ஒரு டிசிபி தலைமையிலான குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விவரம்:
பெங்களூருவில் ஆயுதப்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பந்தோபஸ்த்தின் ஒரு பகுதியாக, கிழக்கு மற்றும் மேற்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் தலைமையில், 10 டி.சி.பி.,க்கள், 15 ஏசிபிகள், 38 காவல் ஆய்வாளர்கள், 250 உதவி காவல் ஆய்வாளர்கள், 1,200 போலீசார், 12 சிஆர்பிஎஃப் படையினர், 36 கேஎஸ்ஆர்பி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுவிற்பனைக்கு தடை
இதனிடையே, வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
73.19% வாக்குகள் பதிவு:
224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி பெற்று இருந்தனர். ஆனால், கடந்த 10ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களித்தனர்.
வாக்கு எண்ணிக்கை:
34 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்குகிறது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அவற்றும் எண்ணும் சுற்றுகளின் எண்ணிக்கை இருக்கும். பகல் 1 மணிக்குள் மாநிலம் முழுவதும் முன்னணி நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தனி ஆட்சியா?.. கூட்டணியா?..
வாக்குப்பதிவிற்கு பிறகான கருத்து கணிப்புகள் ஒரு சில காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும் என கூறினாலும், பெரும்பாலானவற்றில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே, ஜேடிஎஸ் உடன் முன் கூட்டியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.