Kumaraswamy politics: கூட்டணிக்குத் தூது விடும் பாஜக, காங்கிரஸ்.. சிங்கப்பூர் பறந்த குமாரசாமி- கர்நாடக அரசியலில் பரபரப்பு..!
கடந்த ஆறு மாதங்களாக, ஓய்வின்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட குமாரசாமி, தேர்தல் முடிந்ததும் புதன்கிழமை இரவே சிங்கப்பூருக்கு விமானம் மூலம் சென்றார்.
நாட்டின் ஒட்டு மொத்த கவனமும் கர்நாடக தேர்தல் முடிவுகளின் பக்கம் திரும்பியுள்ளது. பிரதான தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதி கொள்வதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 10ஆம் தேதி, கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், நாளை முடிவுகள் வெளியாக உள்ளது.
தேசிய கவனம் பெற்ற கர்நாடகம்:
மற்ற மாநிலங்களை காட்டிலும், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது கடினமாகவே இருந்து வந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம். மாநிலம் முழுவதும் பாஜக, காங்கிரஸ் பலம் பொருந்திய கட்சிகளாக திகழ்ந்தாலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டையாக பழைய மைசூரு பகுதி உள்ளது.
பெங்களூர் (கிராமப்புறம்) தொடங்கி சாமராஜநகர் மாவட்டம் வரையில், பழைய மைசூரு பகுதி நீள்கிறது. 61 தொகுதிகளை கொண்ட பழைய மைசூரு பகுதிதான், அடுத்த ஆட்சி அமைக்க போவது யார் என்பதை தீர்மானித்து வருகிறது. அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்பதை இந்த முறையும் பழைய மைசூரு பகுதியே தீர்மானிக்க உள்ளது.
அந்த வகையில், எப்போதும் போல இந்த முறையும் மதச்சார்பற்ற ஜனதா தளம், கிங் மேக்கராக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில்தான், சிங்கபூருக்கு சென்றுள்ளார் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எச்.டி.குமாரசாமி. நாளை முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அவரின் சிங்கப்பூர் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
கிங் மேக்கரா மாறுவாரா குமாரசாமி?
கடந்த ஆறு மாதங்களாக, ஓய்வின்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட குமாரசாமி, தேர்தல் முடிந்ததும் புதன்கிழமை இரவே சிங்கப்பூருக்கு விமானம் மூலம் சென்றார். இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட்டப்பேரவையே அமையும் என சில கருத்துக் கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. இம்மாதிரியான சூழலில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து இரண்டு கட்சிகளும் தங்களிடம் பேசி வருவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தன்வீர் அகமது, இதுகுறித்து கூறுகையில், "யாருடன் கூட்டணி வைப்பது என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் அதை பொதுமக்களுக்கு அறிவிப்போம்" என்றார்.
ஆனால், கூட்டணி குறித்து பேசியதாக தன்வீர் அகமது தெரிவித்த கருத்தை பாஜக நிராகரித்துள்ளது. ""கூட்டணி குறித்த கேள்விக்கே இடம் இல்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் தொடர்பு கொள்ளவில்லை. நாங்கள் 120 இடங்களைப் பெறுவது உறுதி. நேற்று எங்கள் காரியகர்த்தாக்களிடம் இருந்து தகவல்களைச் சேகரித்த பிறகு, 120 தொகுதிகள் வெல்வோம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்" என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.