![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
BJP Manifesto Karnataka: ’என்.ஆர்.சி, பொது சிவில் சட்டம் அமலாகும்..’ கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையால் பரபரப்பு.. முழு விவரம்
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுளது. இதனால் அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
![BJP Manifesto Karnataka: ’என்.ஆர்.சி, பொது சிவில் சட்டம் அமலாகும்..’ கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையால் பரபரப்பு.. முழு விவரம் Karnataka Election 2023 BJP Manifesto UCC NRC To Be Implemented Know Full Details about Uniform Civil Code National Register of Citizens BJP Manifesto Karnataka: ’என்.ஆர்.சி, பொது சிவில் சட்டம் அமலாகும்..’ கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையால் பரபரப்பு.. முழு விவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/01/98a1459d373ee99158e6f6a9be9eb12d1682929304102332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அங்கு பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். அதில் கர்நாடகாவில் பாஜக வென்றால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை யுகாதி, விநாயகர் சதூர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரை லிட்டர் பால் இலவசம்
அதேபோல வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு தினந்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும், மாதந்தோறும் ஐந்து கிலோ ரேஷன் பருப்பு இலவசமாக வழங்கப்படும், வீடு இல்லாத 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைகள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பட்டியல், பழங்குடிப் பெண்கள் வங்கியில் ரூ.10,000 வைப்புத் தொகை செலுத்தினால், கூடுதலாக 10 ஆயிரம் தரப்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் 30 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். வயதானவர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
அறிவிப்பால் சலசலப்பு
அதேபோல கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுளது. இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) என்றால் என்ன?
என்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்திய குடிமக்களின் தகவல் அடங்கிய பட்டியல் ஆகும். இது இந்திய குடிமக்கள் குறித்து அறிந்து, பராமரிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்திய நாட்டின் குடிமக்கள் ஆக முடியாது. இந்தியாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள், இந்தியாவில் வாழ்பவர்கள் மட்டுமே.
1951 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்களை ஆவணப்படுத்த என்.ஆர்.சி. தயார் செய்யப்பட்டது. வட கிழக்கு மாநிலங்களில் இதை அமல்படுத்த முயன்றபோது போராட்டம் வெடித்தது. முஸ்லிம்கள் உள்ளிட்ட சமூகத்தினர் தங்களின் குடியுரிமை பறிபோகும் என்று அஞ்சினர்.
இந்த நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு என்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கர்நாடகாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் சட்ட விரோதமாகக் குடியேறிய அனைவரும் விரைந்து கர்நாடகாவை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் (Uniform Civil Code)
பாஜக ஆரம்ப காலத்தில் இருந்தே கொண்டுவர விரும்பும் சட்டங்களில் பொது சிவில் சட்டமும் ஒன்று. இந்தியாவில் சிறுபான்மை, பெரும்பான்மை என ஒவ்வொரு சமூகத்துக்கும் கலாச்ச்சாரத்துக்கும் ஒவ்வொரு விதமான சட்டங்கள் இருக்கின்றன. இந்து திருமணச் சட்டம், இந்தி கிறிஸ்தவ திருமணச் சட்டம், பார்சி திருமணம், விவாகரத்துச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் அமலில் உள்ளன. இவை அனைத்துக்கும் பதிலாக இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவாக, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக கூறி வருகிறது. இதன்மூலம், மதம், பாலினம், பாலியல் ஈர்ப்பு ஆகியவை எதையும் கருத்தில்கொள்ளாமல், அனைவருக்கும் ஒரே சட்டம் கொண்டு வரப்படும்.
இந்தச் சட்டம் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அமலுக்கு வரும் என்றும், இதற்கென உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் பின்பற்றப்படும் என்றும் கர்நாடக மாநில பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)