"400 இடங்களில் வென்றால் அரசியல் சாசனத்தையே மாத்திருவோம்" பா.ஜ.க. எம்.பி. பேச்சு - கொதித்தெழுந்த காங்கிரஸ்!
பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே 400 இடங்களில் வென்றால் அரசியல் சாசனத்தையே மாற்றுவோம் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, வெறுப்பு பேச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் சமூகத்தில் பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகள் மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்பி:
இந்த நிலையில், பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். 400 தொகுதிகளில் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி விடுவோம் என அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஹாவேரி மாவட்டம் சித்தாபூரில் உள்ள ஹல்கேரி கிராமத்தில் அவர் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, மக்கள் மத்தியில் பேசிய அவர், "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவோம். இந்த முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என மோடி கூறியுள்ளார்.
ஏன் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும்? மக்களவையில் பாஜகவுக்கு தற்போது இரண்டில் மூன்று பங்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், மாநிலங்களவையில் அப்படி இல்லை. நமக்கு பெரும்பான்மை குறைவாக உள்ளது. கூடுதலாக, மாநில அரசுகளில் எங்களுக்கு (பாஜக) தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
"அரசியல் சாசனத்தையே மாத்திருவோம்"
அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையை அடைவது அவசியம். அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைத் திரித்து, இந்துக்களை ஒடுக்கும் விதிகளையும் சட்டங்களையும் காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது. அதற்கு மாற்றங்களை கொண்டு வர, நமக்கு இந்த பெரும்பான்மை போதாது" என்றார்.
பாஜக எம்பியின் கருத்தை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "நரேந்திர மோடி மற்றும் சங்பரிவாரின் மறைமுக நோக்கங்களை அவரது கருத்துக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றன. அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்பை அழிப்பதே நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் இறுதி இலக்கு.
भाजपा सांसद का बयान कि उन्हें 400 सीट संविधान बदलने के लिए चाहिए, नरेंद्र मोदी और उनके ‘संघ परिवार’ के छिपे हुए मंसूबों का सार्वजनिक ऐलान है।
— Rahul Gandhi (@RahulGandhi) March 10, 2024
नरेंद्र मोदी और भाजपा का अंतिम लक्ष्य बाबा साहेब के संविधान को ख़त्म करना है। उन्हें न्याय, बराबरी, नागरिक अधिकार और लोकतंत्र से नफ़रत…
நீதி, சமத்துவம், உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை அவர்கள் வெறுக்கிறார்கள். சமூகத்தை பிளவுபடுத்தி, ஊடகங்களை அடிமைப்படுத்தி, கருத்து சுதந்திரத்தை முடக்கி, சுதந்திர அமைப்புகளை முடக்கி, எதிர்க்கட்சிகளை ஒழிக்க சதி செய்து இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தை குறுகிய சர்வாதிகாரமாக மாற்ற நினைக்கிறார்கள்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளுடன் சேர்ந்து இந்த சதியை முறியடிப்போம். மேலும், எங்கள் கடைசி மூச்சு வரை அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.