Karnataka: உள் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு; எடியூரப்பாவின் வீட்டில் கல்வீச்சு - கலவர பூமியாகிறதா கர்நாடகா?
கர்நாடக அரசு அறிவித்துள்ள பட்டியல் சாதியினருக்கான (எஸ்.சி) உள் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் இடஒதுக்கீடு தொடர்பான முன்னாள் நீதிபதி சதாசிவன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தக்கோரி, ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ்.எடியூரப்பாவின் வீட்டின் வெளியே மாபெரும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
எடியூரப்பா வீடு மீது தாக்குதல்:
இந்த போராட்டத்தின்போது பஞ்சாரா சமூகத்தினர் எடியூரப்பாவின் வீட்டை திடீரென குறிவைத்து கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில், சில காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. கர்நாடக அரசு அறிவித்துள்ள பட்டியல் சாதியினருக்கான (எஸ்.சி) உள் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் கலவரமாக மாறுவதை தடுப்பதற்காக சிஆர்பிசி 144வது பிரிவின் கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த போராட்டத்திற்கு பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் மீது முதல்வர் குற்றச்சாட்டு:
இதுகுறித்து பேசிய அவர், “ உள்ளூரை சேர்ந்த சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மக்களை தூண்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். ஒவ்வொரு சமூகத்திற்கும் வழங்கப்பட்ட சமூக நீதியை காங்கிரஸால் ஜீரணிக்க முடியாமல் வன்முறையை தூண்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. “ என தெரிவித்தார்.
தொடர்ந்து பஞ்சாரா சமூகத்தினர் கவனமுடன் செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்த பசவபொம்மை, அமைச்சரவை துணைக் குழு பரிந்துரையைத்தான் அரசாங்கம் அமல்படுத்தியதாக கூறினார். மேலும், போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர். அப்போது, அங்கிருந்த சில காவல்துறை அதிகாரிகளுக்கும், பஞ்சாரா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது என்றும் கூறினார்.
உள் இடஒதுக்கீடு:
எஸ்சி பிரிவினருக்கு உள் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த கர்நாடக அமைச்சரவை கடந்த வாரம் முடிவு செய்தது. அதில், பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தியும், SC இடதுசாரி துணைப்பிரிவுக்கு 6 சதவீத இடஒதுக்கீடும், SC வலதுசாரிகளுக்கு 5.5 சதவீதமும், 1 சதவீதம் பட்டியல் சாதி பிரிவில் உள்ள மற்றவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசும் கடிதமும் எழுதியது. இந்த புதிய இட ஒதுக்கீட்டிற்கு பஞ்சாரா சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர் போராட்டம்:
கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா-ஷிகாரிபூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு, அந்த சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்று வருகின்றனர்.
முஸ்லீம்கள் போராட்டம்:
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டையும் பாஜக அரசு ரத்து செய்தது. மாநிலத்தின் இடஒதுக்கீடு கீழ் OBC பிரிவில் இருந்து முஸ்லிம்களை நீக்கி, அவர்களை பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) பிரிவின் கீழ் சேர்க்கும் முடிவை சமீபத்தில் அறிவித்தது .
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) 2B குழுவின் கீழ் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக் கோரி கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் குழுக்கள் பல இடங்களில் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.