"இந்து துரோகியே" கலப்பு திருமணம் செய்து வைத்தவரின் உயிருக்கு ஆபத்து.. பஜ்ரங் தளம் மிரட்டல்
கர்நாடகாவில் இந்துப் பெண்ணுக்கும் முஸ்லிம் ஆணுக்கும் திருமணம் நடத்தி வைத்த நபருக்கு எதிராக இந்து அமைப்புகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்துக்களின் துரோகி என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆணுக்கும், இந்து சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்தவரை மிரட்டியதாக பஜ்ரங் தள அமைப்பின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்ததாக பஜ்ரங் தள நிர்வாகிகள் மீது கர்நாடக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தொடரும் 'லவ் ஜிகாத்' சர்ச்சை:
கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் நகரை சேர்ந்தவர் மகேஷ். மஷ்ரூம் கடை வைத்து நடத்தி வருகிறார். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இவரது ஊழியர் ஒருவர் இந்துப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பற்றி தெரிந்ததும், நான்கு நாட்களுக்கு முன்பு சிக்மங்களூர் நகரில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இவர்களுக்கு மகேஷ் திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு சாட்சியாகவும் கையெழுத்திட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் வெளியே தெரிய வந்த பிறகு, இந்து அமைப்புகள் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, மகேஷ்க்கு எதிராக கொந்தளித்துள்ளன. "லவ் ஜிகாத்தை" ஆதரிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டின. பஜ்ரங் தளத் தலைவர்கள் மகேஷுக்கு எதிராக சமூக ஊடக பிரச்சாரத்தைத் தொடங்கி, அவரை இந்துக்களின் துரோகி என்று முத்திரை குத்தியதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் பதற்றம்:
இந்துப் பெண்ணுக்கும் முஸ்லிம் ஆணுக்கும் திருமணம் நடத்தி வைத்ததன் மூலம் இவர் "லவ் ஜிஹாத்தை" தீவிரமாக ஆதரிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்து சமூகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் நபர்களை பொறுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துள்ளனர்.
சமீபத்தில், மைசூரில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகத்தில் முஸ்லிம் இளைஞரும் ஒரு இந்து பெண்ணும் போலி முகவரி ஆவணத்தை சமர்ப்பித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. போலி ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக இந்து அமைப்புகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன.
கடந்த 2024 ஆம் ஆண்டு, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் 'லவ் ஜிகாத்' வழக்கு தொடர்பாக பாஜகவை சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்தது. இந்து பெண்ணை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்கின்றனர் என பாஜக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. 'லவ் ஜிகாத்' நடப்பதாகவும் கர்நாடக காங்கிரஸ் அரசு மீது குற்றம்சாட்டினர்.

