கர்நாடகா: நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை... புதைக்கப்பட்ட கொடூரம்!
கர்நாடக மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடாகவின் ஷிவமோகா மாவட்டத்தை சேர்ந்த பத்ராவதி தாலுகாவை சேர்ந்த ஒரு கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாய்கள் கொலை செய்யப்பட்டு புதைகப்பட்டதைக் கண்ட கிராம மக்கள் விலங்கினங்கள் மீட்பு படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் அந்த கிராமத்திற்கு சென்று சம்பவ இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நூற்ற்க்கும் அதிகமான நாய்களின் உடல்கள் கிடந்ததாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் காவலர்களின் உதவியோடு உடல்களைக் கைப்பற்றினர்.
முன்னதாக, கடந்த வாரம்தான் கர்நாடாகாவின் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாநில உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அதே போன்ற சம்பவம் மீண்டும் அங்கு அரங்கேறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஷிவமோகா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி பிரசாத் இது குறித்து பேசுகையில் கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், சம்பவ இடத்தில் கால்நடை மருத்துவர்களைக் கொண்ட நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்தி வருவதாகவும், அது தொடர்பான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எத்தனை நாய்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம், எதற்காகாக இத்தனை நாய்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கின்றன எனும் முழுமையான விபரம் இன்னும் வெளியாகவில்லை, விசாரணையின் பிறகே முழுமையான விபரங்கள் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கிராம பஞ்சாயத்து அலுவலர்களுக்கு எதிராக விலங்கு நல ஆவலர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். விஷம் வைத்து நாய்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சில நாய்கள் உயிருடன் புதைக்கப்படிருக்கலாம் எனும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக, கிராம பஞ்சாயத்து அலுவலர் பேசுகையில் எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, பஞ்சாயத்து நிர்வாகம் நாய்களைப் பிடிக்கவோ அல்லது கொல்லவோ உத்தரவிடவில்லை. இந்த சம்பவத்தை செய்தது யார் எனத் தெரியவில்லை. பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் இதே போன்ற சம்பவம் அரங்கேறியது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதேபோன்ற சம்பவம் தற்போது கர்நாடாகாவிலும் அரங்கேறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.