நன்றி கெட்ட கமல்.. பொளந்து எடுக்கும் பாஜக.. கன்னட மொழி சர்ச்சையால் தக் லைஃப் படத்திற்கு தடையா?
கன்னட மொழி குறித்து கமல் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், கன்னடர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசினால் கமல் படத்தை கர்நாடகாவில் தடை செய்யப்படும் என கன்னட அமைப்பு மிரட்டியுள்ளது.

தமிழ் மொழியில் இருந்துதான் கன்னட மொழி பிறந்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இதுகுறித்து விமர்சனம் செய்துள்ளார். கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் கமல் பேசுவதாக அவர் சாடியுள்ளார்.
கன்னட மொழி சர்ச்சையால் புது பிரச்னை:
கமல் நடித்து மனிரத்னம் இயக்கத்தில் வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ள தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கு சென்றது. அந்த வகையில், சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், "தமிழ் மொழியில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது" என்றார்.
"என் வாழ்க்கையும் சரி என் குடும்பமும் சரி தமிழ் மொழிதான். அந்த இடத்தில் அதுதான் என் குடும்பமாக இருக்கிறது. அதனால்தான் அவர் (சிவராஜ்குமார்) இங்கு வந்துள்ளார். அதனால்தான் வாழ்க்கை, உறவு மற்றும் தமிழ் என்று கூறி என் உரையைத் தொடங்கினேன். உங்கள் மொழி (கன்னடம்) தமிழிலிருந்து பிறந்தது. எனவே, நீங்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளீர்கள் (அதன் ஒரு பகுதி)" என கமல் பேசியிருந்தார்.
தக் லைஃப் படத்திற்கு தடையா?
இது, தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தான் தெரிவித்த கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
"கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ள நடிகர் கமல், தனது தமிழ் மொழியைப் புகழ்வதில் நடிகர் சிவராஜ்குமாரைச் சேர்த்து கொண்டு கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம். கன்னடர்களின் தாராள மனப்பான்மையை கமல் மறந்துவிட்டார். கன்னட படங்களில் நடித்திருந்தாலும் நன்றி கெட்டவராக மாறிவிட்டார். எந்த மொழி எந்த மொழியைப் பெற்றெடுத்தது என்று முடிவு செய்ய அவர் ஒரு வரலாற்றாசிரியர் அல்ல" என விஜயேந்திர எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கன்னடம் மற்றும் கன்னடர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசினால் கமல் படத்தை கர்நாடகாவில் தடை செய்யப்படும் என கன்னட அமைப்பான கர்நாடக ரக்ஷனா வேதிகேவின் தலைவர் பிரவீன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கமல் தெரிவித்த கருத்தை விமர்சித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசனுக்கு அது தெரியாது" என தெரிவித்துள்ளார்.





















