Karnataka Election: 'காந்தியைப் போல மக்கள் இதயத்தில் நுழைந்துவிட்டீர்கள்..' ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் பாராட்டு..!
வெற்றிக்கும் வெற்றி பெற்ற விதத்துக்கும் பாராட்டுக்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ராகுல்காந்திக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் மீண்டும் அந்த மாநிலத்தில் கர்நாடகா ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு வாழ்த்து கூறி கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ராகுல்காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் தான் கலந்துகொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து மகாத்மா காந்தியை உதாரணம் காண்பித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
“இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு ராகுல்காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! காந்தியைப் போலவே நீங்கள் மக்களின் இதயங்களில் நுழைந்து விட்டீர்கள். அவரைப் போலவே நீங்கள், மென்மையான வழியில், உலகின் சக்திகளை அன்பாலும் பணிவுடனும் அசைத்துப் பார்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
உங்களது நம்பகமான, நம்பகத்தன்மை வாய்ந்த அணுகுமுறை மக்கள் சுவாசிக்க புதிய காற்றை வழங்கியுள்ளது. பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்துள்ளனர். வெற்றிக்கு மட்டுமல்ல, வெற்றி பெற்ற விதத்துக்கும் பாராட்டுக்கள்!” என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
Shri @RahulGandhi ji, Heartiest Congratulations for this significant victory!
— Kamal Haasan (@ikamalhaasan) May 13, 2023
Just as Gandhiji, you walked your way into peoples hearts and as he did you demonstrated that in your gentle way you can shake the powers of the world -with love and humility. Your credible and… pic.twitter.com/0LnC5g4nOm
முன்னதாக ராகுல் காந்தி தேச ஒற்றுமைக்காக மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரையில் அவரது அழைப்பின் பேரில் புது டெல்லி சென்று கமல்ஹாசன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸூன் கூட்டணி வைக்குமா என்றும் அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, “ஒருபுறம் கூட்டு முதலாளித்துவத்தின் பலமும், மறுபுறம் ஏழை மக்களின் சக்தியும் இருந்தது. கூட்டு முதலாளித்துவம் மக்கள் சக்தியின் முன் வீழ்ந்து விட்டது. கர்நாடகா போரில் வெறுப்பு அல்லது துஷ்பிரயோகம் காங்கிரஸின் ஆயுதங்கள் அல்ல. மக்களின் பிரச்சினைகளுக்காக நாங்கள் போராடினோம்” எனப் பேசினார்.
தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 134 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 64 இடங்களிலும், மதச்சார்பாற்ற ஜனதா தளம் கட்சி 18 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.