Joshimath: ஜோஷிமத் போன்றே புதையும் ஜம்மு காஷ்மீர் கிராமம்...! என்னதான் நடக்கிறது?
ஜோஷிமத் நகரம் போன்றே மற்றொரு நகரம் புதைந்து வருவதாக வெளியான செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம் பற்றி வெளியாகும் தகவல்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு காரணம், அந்த நகரம் மண்ணில் புதைந்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
காஷ்மீரில் ஒரு ஜோஷிமத்:
இப்படி பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஜோஷிமத் நகரம் போன்றே மற்றொரு நகரம் புதைந்து வருவதாக வெளியான செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் புதைந்து வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளிலும் மசூதி ஒன்றிலும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருவதாகவும், கட்டிடங்களில் விரிசல் ஏற்படுவதற்கு காரணமான மண் பெயர்வு ஏற்படுவதற்கான காரணத்தை அறிய நிபுணர்கள் கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தோடா காவல்துறை துணை ஆணையர் விஷேஷ் மகாஜன் கூறுகையில், "மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அவர்களுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படக்கூடாது" என்றார்.
ஜோஷிமத்தில் நடந்தது என்ன?
முன்னதாக, ஜோஷிமத் நகரம் 12 நாள்களில் 5.4 செ.மீ அளவுக்கு மண்ணில் புதைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டிருந்தது. இஸ்ரேவின் தேசிய தொலையுணர்வு மையம் வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படத்தில், டிசம்பர் 27 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரையிலான தேதிகளில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ மண்ணில் புதைந்தது தெரிய வந்தது.
இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்தாண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு தற்போது நிலத்தில் மண் புதைந்து வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மத்திய ஜோஷிமத் நகரில் ராணுவ ஹெலிபேட் மற்றும் கோயில் அமைந்துள்ள பகுதியில் திடீரென மண் பெயர்ந்தது.
2,180 மீட்டர் உயரத்தில் உள்ள ஜோஷிமத்-அவுலி சாலை அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. முந்தைய மாதங்களை காட்டிலும் புதைவின் விகிதம் தற்போது குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஜோஷிமத் நகரம் 9 செ.மீ அளவுக்கு புதைந்துள்ளது.
ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 7 மாத காலத்தில், ஜோஷிமத் நகரின் பகுதிகள் 9 செ.மீ வரை நிலச்சரிவை பதிவு செய்துள்ளது. கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோளில் இருந்து இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே, இஸ்ரோவின் இணையதளத்தில் இருந்து அது நீக்கப்பட்டது.