வாகனத்தை குறிவைத்து தாக்கிய பயங்கரவாதிகள்.. ராணுவ வீரர்கள் வீர மரணம்.. காஷ்மீரில் மீண்டும் பதற்றம்!
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு இடையே தொடர் மோதல் நடந்து வருகிறது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் இரண்டு பாதுகாப்பு படை வீரர்களும் அப்பாவி உள்ளூர்வாசிகள் இருவரும் காயம் அடைந்துள்ளனர்.
அஹ்லன் காடோல் என்ற பகுதியில் இன்று மதியம் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. கோகர்நாக் வனப்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவ வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து ராணுவத்தின் சிறப்பு படையான பாரட்ரூப்பர்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது.
OP GAGARMANDU, #Anantnag
— Chinar Corps🍁 - Indian Army (@ChinarcorpsIA) August 10, 2024
Based on specific intelligence input, a Joint Operation was launched by #IndianArmy, @JmuKmrPolice & @crpf_srinagar today in general area Kokernag, Anantnag. Contact was established and firefight ensued. Two personnel have been injured and evacuated from… pic.twitter.com/24DEESGtGZ
எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவில், "நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கையில் பயங்கரவாதிகளால் கண்மூடித்தனமான, மோசமான துப்பாக்கிச் சூடு காரணமாக இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் அதற்கு ராணுவம் பதிலடி கொடுப்பதும் அதிகரித்து வந்துள்ளது. சமீபத்தில் கூட, பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் மரணம் அடைந்தனர்.
ஷேர் காலனி சோபோரில் பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரி ஒருவர் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது மர்மமான பொருள் வெடித்ததாக கூறப்பட்டது. அதற்கு முன்பு, குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.