அடுத்த சில மணிநேரங்களுக்கு திக் திக்.. யாரும் வெளியே வர வேண்டாம்.. எச்சரித்த முதல்வர்
அடுத்த சில மணி நேரங்களுக்கு யாரும் வெளியே வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்முவில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜம்மு மட்டும் இன்றி சம்பா, பதான்கோட் ஆகியவற்றின் வான் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ட்ரோன்களை இடைமறித்த இந்திய ராணுவம், அதனை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் பகுதியில் மக்கள் வெளியே வராமல் இருப்பதற்காக எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது.
"யாரும் வெளியே வர வேண்டாம்"
இந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களுக்கு யாரும் வெளியே வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வேண்டுகோள் என்னவென்றால், அடுத்த சில மணிநேரங்களுக்கு தெருக்களில் நடமாடுவதை தவிர்த்து, வீட்டிலேயே அல்லது நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள். வதந்திகளைப் புறக்கணிக்கவும், ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்" என பதிவிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காமில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி அளிக்கும் விதமாக பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இறந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
ஜம்முவில் அடுத்த சில மணி நேரங்களுக்கு திக் திக்:
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பியும் ஏவுகணைகளை கொண்டும் தாக்குதல் நடத்தியது. ஜம்மு, சம்பா, பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்களை கொண்டு தாக்கும் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இருப்பினும், இன்று இரண்டாவது நாளாக ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தும் முயற்சியை பாகிஸ்தான் தொடங்கியுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நேற்றை போலவே, பாகிஸ்தான் முயற்சிகளை இந்தியா முறியடித்து வருகிறது.
சம்பாவில் அப்பாவி மக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்திய ராணுவம் அந்த முயற்சிகளை முறியடித்து வருகிறது.
பஞ்சாப் ஃபிரோஸ்பூர் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே வராமல் இருப்பதற்காக எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு வருகிறது.





















