"அரசியலுக்காக கடவுள் பெயர பயன்படுத்துறதா" திருப்பதி லட்டு விவகாரம்.. ஜெகன் மோகன் பதிலடி!
திருப்பதி லட்டில் மாடு உள்ளிட்ட விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக வெளியான ஆய்வு தகவல்கள் ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. சந்திரபாபு குற்றச்சாட்டுகளுக்கு ஜெகன் மோகன் பதிலடி அளித்துள்ளார்.
அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமான செயல் என திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி அளித்துள்ளார்.
"சான்றிதழ் பெற்ற பொருள்களை வைத்து மட்டுமே லட்டு செய்யப்படுகிறது"
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து விரிவாக பேசிய ஜெகன் மோகன், "இவை சந்திரபாபு நாயுடுவின் திசை திருப்பும் உத்திகள். யாராவது இப்படிச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? இதற்கான டெண்டர் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் விடப்படுகிறது.
யாருக்கு விட வேண்டும் யாருக்கு விடக் கூடாது என்ற தகுதி அளவுகோல் பல ஆண்டுகளாக மாறவில்லை. NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தர சான்றிதழை சப்ளையர்கள் வழங்க வேண்டும். நெய்யிலிருந்து மாதிரிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேகரிக்கிறது.
தர சான்றிதழ் பெற்ற பொருள்களை வைத்து மட்டுமே லட்டு செய்யப்படுகிறது. தெலுங்கு தேசம் மத விஷயங்களில் அரசியல் செய்கிறது. எங்கள் ஆட்சியில் 18 முறை பொருள்களை நிராகரித்துள்ளோம். தேவையற்ற சர்ச்சைகள். எனது அரசாங்கம் எந்த மீறலிலும் ஈடுபடவில்லை. அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமான செயல்" என்றார்.
Tirupati Laddu Prasadam row | Amaravati: YSRCP chief and former Andhra Pradesh CM, YS Jagan Mohan Reddy says, "The tender process occurs every six months, and the qualification criteria has not changed for decades. Suppliers must provide an NABL certificate and a product quality… pic.twitter.com/ln3Bl1OMvo
— ANI (@ANI) September 20, 2024
திருப்பதி லட்டில் வெடித்த சர்ச்சை:
திருப்பதி-திருமலை என உச்சரித்தாலே அங்கு வீற்றிருக்கும் பெருமானுக்கு அடுத்தபடியாக, அனைவருக்கும் நினைவில் வருவது பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் லட்டு பிரசாதம் தான். ஸ்ரீ வாரி லட்டு என்றும் அழைக்கப்படும், வாயில் எச்சிலை ஊறவைக்கும் இந்த சுவைமிக்க உணவிற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய பெரும் பாரம்பரியத்தை கொண்ட லட்டு பிரசாதத்தை சுற்றி தற்போது, பூதாகரமான சர்ச்சை வெடித்துள்ளது. பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகமே காரணம் என சாடியிருக்கிறார். இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.