Isha Row: ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
ஈஷா குற்ற வழக்குகள் மீதான விசாரணை குறித்த உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை எதிர்த்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் மேல்முறையிட்ட நிலையில், விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஈஷா குற்ற வழக்குகள் மீதான விசாரணை குறித்த உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை எதிர்த்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் உச்ச நீதிமன்றத்தில் இன்று (அக்.3) மேல் முறையீடு செய்துள்ளார். மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, இன்றே இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை ஈஷா யோகா மையம் மீதான குற்ற வழக்குகள் குறித்து விசாரித்து அக்டோபர் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டது.
#BREAKING Sadhguru approaches #SupremeCourt against the Madras High Court direction to the police to get the details of the criminal cases against Isha Foundation.
— Live Law (@LiveLawIndia) October 3, 2024
Sr Adv Mukul Rohatgi mentions the matter for urgent hearing today.#Sadhguru #IshaFoundation pic.twitter.com/WTQIaNWgNp
ஈஷா யோகா மையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜர் ஆனர். அவர் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரும் பொறியாளர்கள் எனவும் விருப்பப்பட்டே துறவறம் மேற்கொண்டதாகக் கூறினார். தேவையானால் ஆன்லைனில் ஆஜர் ஆகவும் அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்
மத்திய அரசு சார்பில் சாலிசிட்டர் ஜெனரல் கூறும்போது, ’’சென்னை உயர் நீதிமன்றம் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.
தொடர்ந்து இரு பெண்களும் ஆன்லைனில் ஆஜராகி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேசினர். அவர்கள், 8 ஆண்டுகளாக தந்தை தரப்பில் இருந்து துன்புறுத்தல் தொடர்வதாகக் கூறினர். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பின்னணி என்ன?
கோவை, ஈஷா யோகா மையம் மீது அடிக்கடி சர்ச்சைகள் எழும் நிலையில், கோவை வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் தன்னுடைய மகள்களான கீதா மற்றும் லதா இருவரையும் மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மையத்தில் தங்க வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த ஆட்கொணர்வு மனுவுடன் சேர்த்து, ஈஷா யோகா மையத்தின் மீதான பல குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்திருந்தார். இந்த வழக்கை செப்.30 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அவரின் இரண்டு மகள்களிடமும் நேரில் விசாரணை நடத்திய பிறகு, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த வழக்கில் விரிவான அறிக்கையை வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்து அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் கோவை எஸ்பி, டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது.